மாணவி அனிதா மரணத்திற்கு மத்திய, மாநில அரசு பொறுப்பேற்க வேண்டும்: பாப்புலர் ஃப்ரண்ட் கண்டனம்
அரியலூர் மாவட்டம் செந்தூர் ஒன்றியம், குழுமூர் கிராமத்தை சேர்ந்த அனிதா என்ற மாணவி இன்று (01.09.2017) தற்கொலை செய்து இறந்துள்ள செய்தி மிகவும் வேதனை அளிக்கின்றது. அந்த தற்கொலைக்கு மத்திய பாஜக அரசும், மாநில அரசும் பொறுப்பேற்க வேண்டும்.
ஒடுக்கப்பட்ட சமூகத்தில் ஏழை குடும்பத்தில் பிறந்த அனிதா பல எதிர் கால கனவுகளோடு பத்தாம் வகுப்பில் 478 மதிப்பெண்களும், கடந்த ஆண்டு நடந்த 12 ம் வகுப்பு பொது தேர்வில் 1176 மதிப்பெண்களும் பெற்றுள்ளார். அவரின் 12 ம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் கலந்தாய்வு நடந்திருந்தால் அவரின் 196.5 கட் ஆஃப் மதிப்பெண் அடிப்படையில் அவர் மருத்துவ படிப்புக்கு தேர்வாகியிருப்பார். ஆனால் மத்திய பாஜக அரசு நீட் தேர்வை கொண்டுவந்ததினால் ஏழை மற்றும் கிராமப்புற மாணவர்கள் கடும் பாதிப்பினை சந்திப்பார்கள் என்று தொடர்ந்து தமிழக மக்கள் நீட் தேர்வுக்கு எதிராக குரல் கொடுத்து வந்தனர்.
இந்நிலையில் நிலையில்லாத அ.தி.மு.க எடப்பாடி அரசு போதிய அழுத்தத்தை மத்திய அரசுக்கு கொடுக்காமல் தமது பதவியை காப்பாற்றி கொள்ள தமிழக மக்களின் நலன்களை எல்லாம் மத்திய அரசிடம் அடகு வைத்து விட்டு மோடியிடம் சரணாகதி அடைந்தது. தமிழக பாஜகவை சேர்ந்த மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனும், நிர்மலா சீத்தாராமனும் மத்திய அரசு இந்த ஒரு வருடத்திற்கு தமிழகத்திற்கு நீட் தேர்விலிருந்து விலக்கு அளிக்கும் என்று வாக்குறுதி வழங்கினார்கள். ஆனால் உச்ச நீதி மன்றத்தில் தமிழக அரசின் நீட் தேர்வுக்கு எதிரான அவசர சட்டத்திற்கு ஒப்புதல் அளிக்க முடியாது என மத்திய அரசு திட்டவட்டமாக தெரிவித்து துரோகமிழைத்தது.
இதன் விளைவு நீட் தேர்வுக்கு எதிராக உச்ச நீதி மன்றம் வரை சென்று போராடிய அரியலூர் மாணவி அனிதா இன்று தற்கொலைக்கு தள்ளப்பட்டுள்ளார். அவரின் தற்கொலைக்கு மத்திய, மாநில அரசு பொறுப்பேற்று பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும். அதே போன்று கிராமப்புற மற்றும் ஏழை மாணவர்களின் கல்வி உரிமைகளை பறிக்கும் நீட் தேர்வை உடனடியாக மத்திய அரசு கைவிட வேண்டும் என்று பாப்புலர் ஃப்ரண்ட் வலியுறுத்துகின்றது.