ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டைக்கு அருகே அமைந்துள்ளது கீழ்வேலம் கிராமம். இங்குள்ள மாரியம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் ராஜு. 45 வயதான இவர் ஆட்டோ டிரைவராக வேலை செய்து வந்தார். இவரது மனைவி இந்திரா. இவருக்கு வயது 41. ராணிப்பேட்டையில் உள்ள ஷூ கடையில் வேலை செய்து வந்தார். இந்த தம்பதிக்கு 22 மற்றும் 17 வயதில் இரண்டு மகள்கள் உள்ளனர். இதனிடையே, ராஜு குடும்பம் கடந்த சில ஆண்டுகளாக வறுமையில் வாடியிருக்கிறது. அதனை சரி செய்வதற்காக ராஜு பல்வேறு தனியார் நிதி நிறுவனங்களில் கடன் வாங்கியுள்ளார்.
இதையடுத்து, ராஜு கடன் வாங்கி பல மாதங்கள் ஆகியும் அந்த பணத்திற்கு வட்டி மட்டுமே கட்டி வந்ததாக சொல்லப்படுகிறது. இதற்கிடையில், தன்னுடைய அவசர தேவைக்காக அடிக்கடி கடன் வாங்கியுள்ளார். இந்த சூழலில், ராஜுவிடம் கடன் கொடுத்தவர்கள் பணத்தை திருப்பி கேட்டு தொந்தரவு செய்துள்ளனர். இதனால் என்ன செய்வது என தெரியாமல் விழிபிதுங்கிய ராஜு.. வாங்கிய கடனை முழுமையாக அடைக்க முடியாமல் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளார். இதுவரை 5 லட்சம் ரூபாய் வரை கடன் வாங்கிய ராஜு, நிதி நிறுவனங்கள் கொடுத்த அழுத்தத்தால் அதிர்ச்சி முடிவு ஒன்றை எடுத்திருக்கிறார்.
அதன்படி, 9ஆம் தேதி இரவு மது போதையில் வீட்டிற்கு ராஜு தனது மனைவி இந்திராவிடம், "நம்ம குடும்பத்தோட நிம்மதியே போயிடுச்சு. இனிமே நம்ப சந்தோஷமா இருக்க முடியாது.. நாம எல்லாரும் குடும்பத்தோட தற்கொலை பண்ணிக்கலாம்” என கூறியிருக்கிறார். இதை கேட்டு அதிர்ச்சியடைந்த இந்திரா, "உங்களுக்கு என்ன பைத்தியம் புடிச்சிருச்சா? எதுக்கு இப்படிலாம் பேசிக்கிட்டு இருக்கீங்க." என அதனை ஏற்க மறுத்து கணவர் ராஜுவிடம் வாக்குவாதம் செய்திருக்கிறார்.
அதன்பிறகு, ராஜூவை சமாதானம் செய்துவிட்டு அனைவரும் வீட்டுக்குள் தூங்கிக்கொண்டிருந்தனர். ஆனால், தனது முடிவை மாற்றிக்கொள்ளாத ராஜு.. அதிகாலை 3 மணியளவில் கண் விழித்தார். பின்னர், தனது 2 மகள்களையும் எழுப்பிய ராஜு, நாம் அனைவரும் தற்கொலை செய்து கொள்ளலாம் என தனது நிலைமையை கூறி கண்ணீர்விட்டு கதறியிருக்கிறார். இதற்காக முன்கூட்டியே மின்விசிறி கொக்கியில் புடவையை கட்டி வைத்திருந்தார். தன்னுடைய தந்தை அழுவதை பார்த்து மனமிறங்கிய மகள்கள் வேறு வழியின்றி தற்கொலை செய்துகொள்வதற்காக நாற்காலி மீது ஏறி நின்றுள்ளனர். அதன்பிறகு, மகள்கள் கழுத்தில் புடவையை மாட்டிய போது திடீரென கண்விழித்த இந்திரா, அந்த சம்பவத்தை பார்த்து அலறியிருக்கிறார். அங்கிருந்து பதற்றத்துடன் ஓடிவந்து தனது மகள்களை மீட்க போராடினார். ஆனால், கணவர் ராஜு அங்கிருந்த நாற்காலியை இழுத்துவிட்டார். அந்த நேரத்தில், தனது மகள்களை கைவிடாத இந்திரா அவர்களை தாங்கிப் பிடித்துக்கொண்டு கத்தி கூச்சலிட்டார்.
சத்தம் கேட்டு, பக்கத்து வீட்டில் உள்ள ராஜுவின் தம்பி முத்து உடனடியாக அங்கு ஓடி வந்து அரிவாளால் புடவையை அறுத்து 2 மகள்களையும் காப்பாற்றினார். பின்னர், அவர்கள் இருவரையும் வாலாஜாபேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கு முதலுதவி சிகிச்சைக்கு பின் மேல் சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அந்த இரண்டு மகள்களுக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதற்கிடையில், மகள்களை தூக்கில் தொங்கவிட்டு தப்பி ஓடிய ராஜு, வாலாஜாபேட்டை அடுத்த மருதாலம் கேட் பகுதியில் எக்ஸ்பிரஸ் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து காட்பாடி ரயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கடன் தொல்லையால் தந்தை ரயிலில் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.