பெண் குழந்தைகளை வளர்த்துப் படிக்கவைத்து, படிப்புக்கேற்ற வேலையில் சேர்த்துவிட்டு, வரன் தேடி நல்லமுறையில் மணம் முடித்து வைப்பதற்குள், நடுத்தரவர்க்கப் பெற்றோர் படும்பாடு சொல்லிமாளாது. சராசரி விபத்துகளைப் போல, பெண் குழந்தைகள் எந்தவிதத்திலும் பாலியல் பாதிப்புகளுக்கு ஆளாகிவிடக்கூடாது என்ற அக்கறையும் பெரும் கவலையும், பெற்றோர் பலரையும் ஒவ்வொரு நாளும் உள்ளுக்குள் வாட்டிவதைக்கிறது.
விருதுநகரில் நடந்த பாலியல் அத்துமீறலோ, தந்தையால் மகளுக்கு நேர்ந்துள்ளது. அப்படியொரு வக்கிர புத்தியுள்ள நபர், தன் மகளிடம் மிருகமாகவே நடந்திருக்கிறார்.
இவ்விவகாரம் எப்படி வெளிச்சத்துக்கு வந்தது?
14 வயதே ஆன அந்த 9-ஆம் வகுப்பு மாணவி, தாய், தந்தை மற்றும் தங்கையுடன் விருதுநகர் அல்லம்பட்டியில் வசித்து வருகிறாள். தங்கை 8-ஆம் வகுப்பு படிக்கிறாள். சகோதரிகள் இருவரும் பள்ளிக்குச் செல்ல, தாயும் தந்தையும் தினமும் 9 மணிக்கெல்லாம் வேலைக்கு கிளம்பிவிடுவார்கள். சாப்பிடுவதற்கு பகல் 2 மணிக்கு வீடு திரும்பும் பெற்றோர், லஞ்ச் பிரேக் முடித்து 3 மணிக்கு மீண்டும் வேலைக்குப் போய்விடுவார்கள்.
மூத்த மகள் மட்டும் பள்ளி விடுமுறையில் வீட்டில் தனியாக இருக்கும்போது, தந்தையின் உருவத்தில் முன்கூட்டியே 12 மணிக்கெல்லாம் வீட்டுக்கு வரும் அந்த மிருகம் தவறாக நடந்திருக்கிறது. கடந்த 4 மாதங்களாக, இரவுகளிலும் இதே தவறு திரும்பத் திரும்ப அந்த மிருகத்தால் நிகழ்த்தப்பட்டுள்ளது. வெளியில் சொன்னால், அம்மாவையும் தங்கையயும் கொன்றுவிடுவேன் என்று மிரட்டியே தவறைத் தொடர்ந்திருக்கிறது, அந்த மிருகம்.
‘இதுக்கு மேல வாழக்கூடாது..’ என்று முடிவெடுத்து, கடிதம் ஒன்றை எழுதி வைத்துக்கொண்டு, அந்த மாணவி சோகத்துடன் பள்ளி சென்று வந்திருக்கிறாள். சக மாணவியின் கையில் அந்தக் கடிதம் கிடைத்து, வகுப்பாசிரியர் அதனைப் படித்து, தலைமை ஆசிரியர் வரைக்கும் இந்த விவகாரம் போனது. அந்த மாணவியின் தாயை பள்ளிக்கு அழைத்து, நடந்த விவகாரத்தை தலைமை ஆசிரியர் விவரித்ததும் பதறி அழுதிருக்கிறார். அம்மா அளித்த புகாரின் பேரில், போக்சோ மற்றும் கொலை மிரட்டல் பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ள விருதுநகர் கிழக்கு காவல்நிலையம், அந்த மாணவியின் தந்தையைக் கைது செய்துள்ளது.
பாதுகாக்க வேண்டிய தந்தையே மகளைச் சீரழித்தது கொடுமையிலும் கொடுமையல்லவா!