உரம்,பூச்சிக்கொல்லி மருந்து இல்லாத இயற்கை முறையில் செய்யும் பாரம்பரிய நெல் விவசாயத்திற்கு கீரமங்கலம் பகுதி விவசாயிகள் திரும்பியுள்ளனர். விளைச்சல் அமோகமாக உள்ளதாக விவசாயிகள் மகிழ்ச்சி. கடந்த ஆண்டுகளை விட அதிகமான விவசாயிகள் இந்த ஆண்டு பாரம்பரிய நெல் விவசாயத்திற்கு திரும்பியுள்ளனர்.
இன்றைக்கு விவசாயத்தில் அதிக மகசூல் பெற வேண்டும், பூச்சிகளிடம் இருந்து பயிர்களை காக்க வேண்டும் என்பதால் விஷத்தன்மையுள்ள பூச்சிக் கொல்லி மருந்துகள், உரங்கள் தெளிக்கப்படுவதால் அந்த பயிரில் விளையும் உணவுப் பொருளும் விஷத் தன்மையும் சேர்ந்துவிடுகிறது. அந்த உணவை உண்ணும் போது பல்வேறு நோய்கள் ஏற்படுகிறது. கால்நடைகளுக்கு வைக்கோல் போன்றவற்றை கொடுக்கும் போதும் கால்நடைகளும் பாதிக்கப்படுகிறது. அதனால் உரம் பூச்சிக்கொல்லி மருந்துகள் இல்லாத விவசாயத்தை செய்ய வேண்டும் என்று இயற்கை ஆர்வலர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
ஜல்லிக்கட்டு போராட்டம், நெடுவாசல் போராட்டம் போன்ற இளைஞர்களின் போராட்டம் இயற்கை, விவசாயம் பாதுகாப்புக்கு மேலும் இளைஞர்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளது. அதனால் தான் தற்போது மென்பொருள் பொறியாளர்களும் கூட இயற்கையை பாதுகாக்கவும், பாரம்பரிய விதை, விவசாயத்தை பாதுகாக்கவும் நீர்நிலைகளை பாதுகாக்கவும் ஆர்வம் காட்டுவதுடன் அதற்காக பொருளாதார உதவிகள் செய்வதுடன் விடுமுறை நாட்களில் விவசாயம் காக்க சொந்த கிராமங்களுக்கு சென்று வருகின்றனர்.
இது ஒருபுறம் என்றால் அதிக மகசூல் தரும் என்று பல்வேறு விதை நிறுவனங்களும் விளம்பரம் செய்து மரபு மாற்றப்பட்ட புதிய ரகத்தில் விதைகளை விவசாயிகளிடம் திணித்து வருகிறது. அந்த விதைகளை வாங்கி ஒரு முறை மட்டுமே பயன்படுத்த முடிகிறது. மறு விதைப்பிற்கு மறுபடியும் விதை நிறுவனங்களிடம் இருந்து மட்டுமே விதை வாங்கவேண்டிய அவலநிலை உள்ளது. அதனால் விதை நிறுவனங்களும் நேர்த்தி இல்லாத விதைகளை கொடுத்து விவசாயிகளை ஏமாற்றியும் உள்ளது. இதை உணர்ந்த இயற்கை விவசாய ஆர்வலர்கள் நம் பாரம்பரிய விதைகளை மீண்டும் கொண்டுவர வேண்டும் என்ற எண்ணத்தில் பழைய நெல் ரகங்களை விதைக்க தொடங்கிவிட்டனர். தமிழகம் முழுவதும் பாரம்பரிய நெல் விவசாயத்திற்கு விவசாயிகள் இறங்கியுள்ளனர்.
அதே போல தான் புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம், சேந்தன்குடி, நகரம், செரியலூர், மேற்பனைக்காடு போன்ற கிராமங்களில் பல விவசாயிகள் பாரம்பரிய நெல்லான பூங்கார், மாப்பிள்ளை சம்பா, கிச்சடி சம்பா, கருப்பு கவுணி போன்ற பழைய ரக நெல் விவசாயத்தை தொடங்கி உள்ளனர்.
பாரம்பரிய இயற்கை விவசாயம் செய்யும் கீரமங்கலம் பகுதி விவசாயிகள் கூறும் போது.. தங்களின் வீட்டு உணவு தேவைக்காக நம் பாரம்பரிய நெல்லை பயிரிட்டுள்ளோம். 80 நாளில் அறுவடைக்கு வரும் பூங்கார் (சிவப்பு அரிசி), 120 நாளில் அறுவடைக்கு வரும் மாப்பிள்ளை சம்பா, கிச்சடிச் சம்பா போன்ற நெல் பயிரிட்டுள்ளோம். சம்பா நெல் ஆள் உயரத்திற்கு வளர்கிறது. அதனால் கால்நடைகளுக்காண தீவனம் பிரச்சனை இல்லை. நெல் நடவுக்கு முன் வயலில் எரு போடுவதுடன் சரி அதன் பிறகு அறுவடை வரை உரம், பூச்சிக்கொல்லி மருந்து தெளிப்பதில்லை. அதனால் இயற்கையாகவே விளைகிறது. கடந்த ஆண்டு சில விவசாயிகள் இந்த நெல் விவசாயம் செய்தோம். அந்த விதையை இந்த ஆண்டு பல விவசாயிகளுக்கும் கொடுத்து பலர் பாரம்பரிய இயற்கை விவசாயம் செய்துள்ளனர். இதைப் பார்த்து மதுரை, கோவை, பட்டுக்கோட்டை பகுதி விவசாயிகள் நெல் விதை கேட்டு வாங்கி சென்றுள்ளனர். இன்றும் சில ஆண்டுகளில் நாம் பயன்படுத்தி அழிந்துவிட்ட அத்தனை ரகத்தில் உள்ள நெல், மற்றும் காய்கறி விதைகளை முழுமையாக பாரம்பரிய விவசாயத்தில் பயன்படுத்த திட்டமிட்டுள்ளோம் என்றனர்.
மேலும் இயற்கை முறையில் விவசாயம் செய்யப்பட்டுள்ள பாரம்பரிய நெல்லை உணவுக்காக வாங்க ஏராளமானோர் ஆர்வம் காட்டி வருகின்றனர். அதனால் பாரம்பரிய நெல் ரகங்களை அதிக விலை கொடுத்தும் வாங்கிச் செல்கின்றனர். இதனால் விவசாயிகளுக்கும் லாபம் கிடைப்பதாகவும் மற்ற நெல் ரகங்களைவிட அதிக மகசூல் கிடைப்பதாகவும் விவசாயிகள் கூறுகின்றனர்.