திருவாரூரில் விவசாயிகள் போராட்டம்
பயிர் காப்பீடு இழப்பீட்டு தொகை கேட்டு மூன்று கிராமங்களை சேர்ந்த விவசாயிகளும் அரசியல் கட்சியினரும் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தமிழகத்தில் வரலாறு காணத அளவில் ஏற்பட்ட வறட்சி காரணமாக நெல், கரும்பு, வாழை, உள்ளிட்ட அனைத்து பயிர் சாகுபடியும் பாதிக்கப்பட்டது. அனைத்து மாவட்டங்களையும் வறட்சி பாதித்த மாவட்டமாக அரசு அறிவித்து குறைந்த அளவிலான நிவாரண தொகை வழங்கியது.
இந்நிலையில் மத்திய அரசின் தேசிய வேளாண் காப்பீட்டு திட்டம் தனியார் இன்சூரன்ஸ் நிறுவனங்களிடம் ஒப்படைக்கப்பட்டது. அதன் பேரில் அந்த தனியார் நிறுவனங்கள் 2016-17 ஆண்டிற்கான இழப்பீட்டு தொகையை அறிவித்தது.
திருவாரூர் மாவட்டத்திற்கு ரூ 489 கோடி ஒதுக்கப்பட்டு அந்த தொகையை விவசாயிகளின் வங்கி கணக்கில் வரவு வைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் விடுபட்டு போன பகுதிகளுக்கு இழப்பீடு வழங்குவதற்காக மேலும் ரூ 125 கோடி இன்சூரஸ் தொகை வழங்க உள்ளதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்தது. அதனை தொடர்ந்து விடுப்பட்டுபோன கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர்.
திருவாரூர் மாவட்டம் குன்னியூர், வேப்பத்தாங்குடி, கல்யாணசுந்தரபுரம் ஆகிய கிராமங்களுக்கு இழப்பீட்டு தொகை கிடைக்கவில்லை என அப்பகுதி விவசாயிகள் தொடர் போராட்டத்தில் இருக்கின்றனர். இழப்பீட்டு தொகை வழங்க கோரி விவசாயிகள் மற்றும் பொது மக்கள் திருத்துறைப்பூண்டி சாலையில் மாவூர் கடைவீதியில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். விவசாயிகளுக்கு ஆதரவாக திமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் பிஜேபி உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சியினர் கலந்து கொண்டனர். இதனால் திருவாரூர்-திருத்துறைப்பூண்டி நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
போராட்டம் நடந்த இடத்திற்கு சென்ற திருவாரூர் தாசில்தார் அம்பிகாபதி, வேளாண் துறை துணை இயக்குனர் சிவக்குமார் ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். அப்போது இழப்பீடடு தொகை அளித்தால்தான் போராட்டத்தை கைவிடுவோம் என்று பிடிவாதமாக இருந்தனர். என்ன செய்வது என்று தெரியாமல் அதிகாரிகள் தவித்தனர். பின்னர் வரும் 20ம் தேதிக்குள் இழப்பீடடு தொகை வழங்கப்படும் என்று உறுதி அளித்த பிறகே போராட்டம் நிறுத்தப்பட்டது.
க.செல்வகுமார்