Skip to main content

பைப்லைன் அமைத்ததை தடுத்து நிறுத்திய விவசாயிகள்!

Published on 29/09/2020 | Edited on 29/09/2020

 

 

கடலூர் மாவட்டம், திட்டக்குடி அடுத்த அரங்கூர், பெரங்கியம், தி.ஏந்தல் உள்ளிட்ட கிராமங்களின் வழியாக கடந்த 2004-ஆம் ஆண்டு இந்தியன் ஆயில் நிறுவனத்தினர் ஒப்பந்த அடிப்படையில், விவசாய நிலங்களில் 8 அடி ஆழத்தில் குழாய்கள் அமைத்து சென்னையிலிருந்து மதுரைக்கு கச்சா எண்ணெய் எடுத்துச் சென்றனர். அப்போது விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட இழப்பீடு மிகவும் குறைவாக வழங்கப்பட்டதால் விவசாயிகள் அதிருப்தியடைந்தனர். 

 

இந்நிலையில், தற்போது சென்னை எண்ணூரிலிருந்து, தூத்துக்குடிக்கு எரிவாயு எடுத்துச்செல்ல குழாய்கள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதற்காக கடலூர் மாவட்டத்திலுள்ள அரங்கூர், பெரங்கியம் பகுதியில் உள்ள விளைநிலங்களில் 60 அடி அகலத்திற்கு சோளம், பருத்தி உள்ளிட்ட பயிர்களை அழித்து, பாதை அமைக்கும் பணி 27-ஆம் தேதி தொடங்கியது. அதற்கு அப்பகுதி விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து பணிகளை தடுத்து நிறுத்தினர். 

 

அதையடுத்து நேற்று (28.09.2020) அரங்கூர் கிராமத்தில் இந்தியன் ஆயில் நிறுவனத்தின் பைப்லைன் பிரிவு உதவி மேலாளர் கிருஷ்ணா கிராம நிர்வாக அலுவலர் வினோத்குட்டிகண்ணா முன்னிலையில் விவசாயிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். அப்போது விவசாயிகள் ராஜேந்திரன், பச்சமுத்து ஆகியோர், 'ஏக்கருக்கு 30 ஆயிரம் ரூபாய் வரை செலவுசெய்து பயிர் வைத்துள்ளோம். இந்த நேரத்தில் பயிர்களை அழித்து பைப்லைன் அமைப்பதால் எங்களுக்கு நஷ்டம் ஏற்படும். எனவே அறுவடை காலத்திற்குப் பின் பணிகளைத் தொடரவேண்டும். இல்லையெனில் விவசாயிகளுக்கு உரிய நஷ்டஈடு வழங்கிய பின் பணிகளைத் துவக்க வேண்டும்' எனக் கோரிக்கை விடுத்தனர்.

 

Ad

 

ஆனாலும்,  நஷ்டஈடு எவ்வளவு வழங்கப்படும் என்பது குறித்து பேச்சுவார்த்தையில் உறுதியான தகவல்கள் தெரிவிக்கப்படாததால் விவசாயிகள் அதிருப்தியடைந்து, அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். 

 

தொடர்ந்து விவசாயிகளின் நிலம் மற்றும் பயிருக்கு உரிய நஷ்டஈடு வழங்க உயர் அதிகாரிகளுடன் பேசி நடவடிக்கை எடுக்கப்படும் என நிறுவனத்தினர் தெரிவித்ததையடுத்து விவசாயிகள் கலைந்து சென்றனர்.
 

 

 

 

சார்ந்த செய்திகள்