நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாக தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.
இந்நிலையில் திமுக, அதிமுக, பாஜக, நாம்தமிழர் என்று நான்கு கட்சிகளும் நான்குமுனை போட்டியாக தங்களது கூட்டணி கட்சிகளோடு தீவிரமாக வாக்குசேகரித்து வருகின்றனர். பல்வேறு சிறு இயக்கங்களும் இந்த கூட்டணி கட்சிகளுக்கு ஆதரவு அளித்து வருகின்றனர். அந்த வகையில் உழைக்கும் விவசாயிகள் இயக்கம் தங்களது ஆதரவை இந்தியா கூட்டணிக்கு அளித்திருக்கிறார்கள்.
உழைக்கும் விவசாயிகள் இயக்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் ”தமிழ்நாடு – புதுச்சேரி மாநிலங்களில் உள்ள, சிறு, குறு, குத்தகை விவசாயிகள் மற்றும் நிலமற்ற விவசாயத் தொழிலாளர்களின் அனைத்து உரிமை மற்றும் மேம்பாட்டுக்காக, உழைக்கும் விவசாயிகள் இயக்கம் கடந்த 30 ஆண்டுகளாக, ‘மார்க்சிய வழிகாட்டுதலை உள்ளடக்கிய அம்பேத்கரிய சித்தாந்த’ அடிப்படையில் கோரிக்கைகள் மற்றும் போராட்டங்களை முன்னெடுத்து வருகிறது”.
இம்மாதம் 19-ஆம் தேதி நடைபெறவுள்ள, 18 ஆவது நாடாளுமன்றத் தேர்தலில் இந்த இயக்கத்தின் நிலைப்பாட்டை வரையறுக்கும் பொருட்டு, திருச்சி மாவட்டம், துவரங்குறிச்சியில் கடந்த 25 – ஆம் தேதி இயக்க மாநிலத் தலைவர் சுந்தர் தலைமையில் இயக்க உயர் மட்டக்குழு கூடி, நாடு சந்திக்கும் வரலாறு காணாத இன்றைய பெரும் சவால்கள் அதன் விளைவாக குறிப்பாக உழைக்கும் விவசாயிகளின் ஒட்டுமொத்த வாழ்வில் ஏற்படும் சிக்கல்களைக் கருத்தில் கொண்டு விவாதித்து கீழ்க்காணும் முடிவுகளை எடுத்தது
இந்திய ‘அரசியல் சாசனச் சட்டத்தின்’ அடிப்படை அம்சங்களான – “சனநாயகம், மதச்சார்பின்மை, சோசலிசம், பன்முகத்தன்மை, சமூக நீதி, சமூக மற்றும் பொருளாதார சமத்துவம், பேச்சுரிமை, எழுத்துரிமை, பெண் சமத்துவம், மாறுபடும் கருத்துக்களை முன்வைக்கும் உரிமை, அரசியல் அதிகாரத்தை வென்றெடுக்க அனைத்து தரப்பினருக்கும் உள்ள அரசியல் உரிமை ஆகிய அனைத்திற்கும் முற்றிலும் எதிராக, ‘ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே மதம், ஒரே கலாச்சாரம், ஒரே சிவில் சட்டம், கார்பரேட்டுகளுக்கு மொத்த இந்தியாவையும் திறந்துவிடுதல், மத அடிப்படையில் பெரும்பான்மைவாதம் பேசி நாட்டைப் பிளவு படுத்தி, வெறுப்பு அரசியலை வளர்த்து, மாநில அரசுகளின் உரிமை மற்றும் கூட்டாட்சித்தத்துவத்தை மறுத்து, நாட்டின் முதுகெலும்புகளான உழைக்கும் விவசாயிகளின் உரிமை மற்றும் நலனை மொத்தமாக புறந்தள்ளி,’ இந்த பழம் பெரும் நாட்டின் அனைத்து சிறப்புகளையும் சிதைக்கும்” பாசிச ஆர் எஸ் எஸ்-இன் அரசியல் சக்தியான பிஜேபி மற்றும் அதன் கூட்டணியில் உள்ள எந்த கட்சிக்கும், வேட்பாளருக்கும், நமது வாக்கு மற்றும் ஆதரவு இல்லை.
மேற்காணும் அனைத்து நாசகரப்போக்கையும் எதிர்த்து, இந்திய அரசியல் சாசனச்சட்ட விழுமியங்களை மதித்து, இந்தியாவின் சனநாயகக் கொள்கை கோட்பாடுகள், மற்றும் உழைக்கும் விவசாயிகளை உள்ளடக்கிய உழைக்கும் வர்க்கத்தின் நலன் காக்கப்பட ஒன்று திரண்டுள்ள இந்தியா கூட்டணியை ஆதரிப்பது என்று முடிவெடுக்கப்பட்டு இருக்கிறது.