தமிழ்நாட்டில் ஒவ்வொரு மாவட்டத்திலும், மாவட்ட தலைநகரில் மட்டுமின்றி ஒவ்வொரு கோட்டத்திலும் ஒவ்வொரு மாதமும் விவசாயிகள் குறைதீர்ப்பு கூட்டங்கள் நடத்தப்படுகிறது. அதாவது மாவட்ட தலைநகரில் மாவட்ட ஆட்சியர்கள் தலைமையிலும் கோட்டங்களில் கோட்டாட்சியர் தலைமையிலும் நடத்தப்படுகிறது.
இதேபோல, புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி கோட்டத்தில் கோட்டாட்சியர் சிவக்குமார் தலைமையில் வட்டாட்சியர்கள் முன்னிலையில் அறந்தாங்கி வட்டாட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் செவ்வாய்க்கிழமை காலை 11 மணிக்கு நடப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி கூட்டத்தில் வருவாய்த்துறை, மின்துறை, நீர்பாசனத்துறை உள்பட 24 துறை அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
ஆனால் 12 மணி கடந்தும் சுமார் 7 விவசாயிகள் விவசாய சங்க பிரதிநிதிகள் மட்டுமே கலந்து கொண்டிருந்தனர். நீண்ட நேரமாகியும் விவசாயிகள் கலந்து கொள்ளாததால் 7 விவசாயிகளுடன் கூட்டம் தொடங்கி அவர்களின் கருத்துக்களும் கோரிக்கைகளும் கேட்கப்பட்டது.
ஆவுடையார்கோயில் பகுதி பாதுகாக்கப்பட்ட பகுதி என்பதால் நிலத்தடி நீரை எடுக்க அனுமதி இல்லை ஆகவே இதனை அதிகாரிகள் சரி செய்ய வேண்டும். நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றி சீமைக் கருவேல மரங்களை அகற்ற வேண்டும். அதிகமான மக்கள் வந்து செல்லும் கோடியக்கரையை மேம்படுத்த வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கைகள் வைத்தனர். இதற்கு துறை அதிகாரிகள் பதில் அளித்ததுடன் விவசாயிகள் குறைதீர்ப்பு கூட்டம் நிறைவடைந்தது.
விவசாயிகளே இல்லாமல் அதிகாரிகள் மட்டுமே கலந்து கொண்டு நடத்திய விவசாயிகள் குறைதீர்ப்பு கூட்டம் பற்றிய தகவல் அறந்தாங்கி கோட்ட விவசாயிகளுக்கு சென்றடையவில்லை என்றும் இனி வரும் காலங்களில் கடமைக்காக இல்லாமல் விவசாயிகளுக்கு முன்னதாக தகவல் கொடுத்து குறைதீர்ப்பு கூட்டங்களை நடத்த வேண்டும் என்கின்றனர் விவசாயிகள்.