திருச்சி மாவட்டத்தில் 75 ஆயிரம் ஏக்கரில் சம்பா சாகுபடிக்காக நெல் பயிரிடப்பட்டுள்ளது. 25 ஆயிரம் ஏக்கர் பருத்தி, 30 ஆயிரம் ஏக்கர் மக்காச்சோளம், 30 ஆயிரம் ஏக்கரில் வாழை பயிரிடப்பட்டுள்ளன. தற்போது தொடர் மழை பெய்துவருவதால் நடவு செய்த வயல்வெளிகளில் மழைநீர் தேங்கி வடிய வழியின்றி உள்ளது. மேலும், வாழை சாகுபடி செய்த வயல்களில் தண்ணீர் தேங்கியுள்ளது. தொடர்ச்சியாக நெற்பயிர் மற்றும் வாழைகளில் தண்ணீர் உள்ளதால் அவை அழுகும் நிலை ஏற்பட்டுள்ளது.
குறிப்பாக அந்தநல்லூர், மணிகண்டம், திருவரம்பூர், லால்குடி, கொடியாலம், புலிவலம், மேற்குடி, சாத்தனூர், மருதண்டகுறிச்சி, திருப்பராய்த்துறை, அனலை உள்பட மாவட்டம் முழுவதும் சுமார் 30 ஆயிரம் ஏக்கரில் வாழை பயிரிடப்பட்டுள்ளது. அவற்றில் அந்தநல்லூர் ஒன்றியத்தில் மட்டும் மழையால் 300 ஏக்கர் வாழை பாதிக்கப்பட்டுள்ளது. அதேபோல் அந்தநல்லூர், திருவெரும்பூர் வட்டாரத்தில் பயிரிடப்பட்டுள்ள சுமார் 600 ஏக்கர் நெல் பயிர்களும் பாதிக்கப்பட்டுள்ளன.
மழைநீர் வடிகால் செல்லும் பாதைகளில் அமலைச் செடிகள் அடைத்துள்ளதால் வெளியே செல்ல வழியில்லாமல் உள்ளது. பயிர் பாதிப்புகளைக் கணக்கிட கிராம நிர்வாக அதிகாரிகளுக்கு மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். ஒரு ஏக்கர் சாகுபடிக்கு 25 ஆயிரம் வரை விவசாயிகள் செலவு செய்துள்ளனர். ஏற்கனவே கடந்த செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் மழையால் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தற்போது மூன்றாவது முறையாக விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு 20 ஆயிரம் ரூபாய் வரை அரசு இழப்பீடு வழங்க வேண்டும் என்று விவசாயிகள் தரப்பில் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.