சேலம் மாவட்டம் கல்வராயன் மலைப் பகுதி எல்லையில் உள்ளது கருமந்துறை கிராமம். இந்த ஊர் அருகிலுள்ள புதூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஐயாத்துரை(48). விவசாயியான இவர் மனைவி லட்சுமி மற்றும் இரண்டு மகள்கள், ஒரு மகன் ஆகியோருடன் வசித்து வந்தார். இந்த நிலையில் இவரது மனைவி லட்சுமி ஏற்கனவே இறந்துவிட்டார். இதையடுத்து ஐயாத்துரை மல்லிகா என்பவரை இரண்டாவதாகத் திருமணம் செய்து கொண்டார். இதில் இவருக்கு ஒரு மகன் உள்ளார். அப்படிப்பட்ட நிலையில் கள்ளக்குறிச்சி மாவட்ட எல்லையில் உள்ள மணியார்பாளையம் பகுதியில் ஐயாத்துறைக்கு விவசாய நிலம் உள்ளது.
இந்த நிலத்தில் விவசாயப் பணிகளைப் பார்வையிடுவதற்காக ஐயாத்துரை தினசரி மணியார்பாளையம் வந்து செல்வது வழக்கம். இப்படிப்பட்ட நிலையில் நேற்றும் வழக்கம் போல் தனது நிலத்திற்கு வந்துள்ளார். வந்தவர் திரும்பி வீட்டுக்குச் செல்லவில்லை. இதனையடுத்து அவரது குடும்பத்தினர் அவரை தேடினர். இந்த நிலையில் மணியார்பாளையத்தில் உள்ள அவரது நிலத்துக்கு அருகில் ஐயாத்துரை மூக்கில் ரத்தம் வழிந்த நிலையில் பின் தலையில் காயத்துடன் இறந்து கிடந்துள்ளார். அப்பகுதி வழியே சென்றவர்கள் ஐயாத்துரை இறந்து கிடந்ததைப் பார்த்துவிட்டு காவல்துறைக்குத் தகவல் அளித்துள்ளனர்.
இதையடுத்து கள்ளக்குறிச்சி டி.எஸ்.பி ராஜலஷ்மி, கச்சராபாளையம் இன்ஸ்பெக்டர் ஸ்ரீபிரியா, சப் இன்ஸ்பெக்டர் ராஜா மற்றும் சில போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள். ஐயாத்துரை உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளனர். இதுகுறித்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து ஐய்யாதுரை எப்படி இறந்தார், முன்விரோதம் காரணமாக அடித்து கொலை செய்யப்பட்டாரா அல்லது உடல் நிலை மோசமாகி இருந்துள்ளாரா இப்படி பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.