பெரம்பலூர் அருகே சேற்றில் சிக்கிய மாட்டை போராடி மீட்ட விவசாயி ஒருவர் மாட்டை மீட்க உதவிக் கேட்டும் சம்பவ இடத்திற்கு வந்து உதவ முன்வராத கிராம நிர்வாக அலுவலரிடம் நீதிகேட்டு முறையிடும் வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளது.
பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் வட்டம் சங்கராய நல்லூர் ஊராட்சிக்கு உட்பட்ட பேரையூர் கிராமத்தை சேர்ந்தவர் தர்மராஜ். விவசாயியாக இருக்கும் தர்மராஜ் பசுமாடு உள்ளிட்ட சில கால்நடைகளையும் வளர்த்து வருகிறார். இந்நிலையில் இவர் வளர்த்து வந்த பசுமாடு ஒன்று நேற்று ஊருக்கு மேற்குப்புறமாக உள்ள மருதை ஆற்றில் மேச்சலுக்கு சென்ற நிலையில் அங்கிருந்த சேற்றில் சிக்கிக்கொண்டது. தகவலறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற தர்மராஜ் பல்வேறு முறைகளில் பசுமாட்டை சேற்றிலிருந்து மீட்க போராடினார். கயிறை கட்டி இழுத்து பார்த்தும் மாட்டை மீட்க முடியவில்லை. இதனால் கிராம நிர்வாக அலுவலரை போனில் தொடர்புகொண்டு பசுமாட்டை மீட்க உதவி செய்யுமாறு கேட்டுள்ளார். ஆனால் உதவி கிடைக்கவில்லை. பின்னர் அந்த பகுதி இளைஞர்களுடன் ஜேசிபி இயந்திரம் மூலம் போராடி இறுதியாக பசுமாட்டை தர்மராஜ் மீட்டார்.
பசுமாட்டை மீட்டபின்பு அதே சேற்றுடன் கிராம நிர்வாக அலுவலரின் அலுவலகத்திற்குச் சென்ற தர்மராஜ், ஏன் உதவி கேட்டும் பசுமாட்டை மீட்க வரவில்லை என கேட்க, பசுமாட்டை மீட்பது தன் வேலை அல்ல தனக்கு பல வேலைகள் இருக்கிறது என்று சொல்லிக்கொண்டே அலமாரியில் உள்ள கோப்புகளை தேடுவதுபோல் நின்றுகொண்டார். அப்பொழுது பேசிய தர்மராஜ் ''மாடு எனக்கு உசுரு மாதிரி.... மாடு போயிட்டா 50,000 எனக்கு நஷ்டம்.. உனக்கு கவெர்மென்ட் சம்பளம் தருது உங்காந்துட்டு போயிடலாம்... முகம் காட்டிகூட இந்த விஏஓ பேச மாட்டிங்கிறாரு... ஆற்றில் மண் அள்ளுவதால் சேறு நிற்கிறது. இன்று மாடு சேற்றில் மாட்டிக்கொண்டது போல் நாளை மனிதர்கள் மாட்டிக்கொண்டால் என்ன செய்வது. மண் எடுக்கிறார்கள் என புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் இல்லை'' என்று பேசினார். இதனை வீடியோ பதிவு செய்த சிலர் இதனை சமூகவலைத்தளத்தில் பதிவு செய்ய வைரலாகி வருகிறது இந்த வீடியோ.