நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் கடந்த ஜனவரி 6ந் தேதி பதவியேற்றுக் கொண்டனர். கிராம பஞ்சாயத்தில் துணை தலைவர் தேர்வு, ஊராட்சி ஒன்றியத்தில் ஒன்றிய குழு தலைவர், ஒன்றிய குழு துணை தலைவர், மாவட்ட ஊராட்சி குழு தலைவர், துணை தலைவர் தேர்தல் ஜனவரி 11ந்தேதி காலை அந்தந்த மாவட்ட ஊராட்சி குழு அலுவலம், ஒன்றிய குழு அலுவலகம், கிராம பஞ்சாயத்து அலுவலகத்தில் நடைபெறவுள்ளது. இதற்கான குதிரை பேரம் பரபரப்பாக நடந்து வருகிறது. திமுகவில் இருந்து அதிமுகவிற்கும், அதிமுகவில் இருந்து திமுகவிற்கும், இரண்டு கட்சிகளும் சுயேட்சைகளையும், பிற கட்சி கவுன்சிலர்களை தங்களுக்கு சாதகமாக இழுக்கும் பணியில் தீவிரமாகவுள்ளனர். சுயேட்சைகள் பக்கம் மட்டும்மல்ல கட்சி சின்னத்தில் நின்று வெற்றி பெற்றவர்களின் தரப்பிலும் பண மழை பொய்கிறது.
திருவண்ணாமலை ஒன்றியத்தில் உள்ள 18 ஊராட்சி ஒன்றியத்தில் திருவண்ணாமலை, தண்டராம்பட்டு, கீழ்பென்னாத்தூர், ஆரணி, தெள்ளார், பெரணமல்லூர், புதுப்பாளையம், போளுர், சேத்பட் என 12 ஒன்றியங்களின் சேர்மன் மற்றும் துணை சேர்மன் பதவிகளை பிடிக்க திமுக திட்டமிட்டுள்ளது. இதில் 10 ஒன்றியங்களில் திமுக எந்தவித போட்டியும் இல்லாமல் தலைவர் மற்றும் துணை தலைவர் பதவிகளில் வெற்றி பெற்றுவிடும். இரண்டு ஒன்றியங்களில் மட்டும் தலைவர் பதவியை பிடிக்க போராடிவருகிறது. அதேநேரத்தில் அதிமுக கூட்டணி மேற்குஆரணி, செய்யார், வெம்பாக்கம், வந்தவாசி, ஜவ்வாதுமலை என 6 ஒன்றியங்களில் அதிமுக வெற்றி பெறும் நிலையில் உள்ளது. இந்நிலையில் சட்டமன்ற கூட்டத்தொடர் முடிந்து அமைச்சர் சேவூர்.ராமச்சந்திரன், திமுக மா.செவும், முன்னாள் அமைச்சருமான எ.வ.வேலு இருவரும், திருவண்ணாமலை திரும்பி கட்சியினருடன் தொடர்ச்சியாக ஆலோசனை நடத்தி வருகின்றனர். திமுக வெல்லும் இடங்களை தாங்கள் கைப்பற்ற முடியுமா என ஆளும்கட்சியான அதிமுக பிரமுர்கள் அமைச்சர் வீட்டில் ஆலோசனை நடத்துகின்றனர்.
நாம் 12 ஒன்றியங்களில் வெற்றி பெற வேண்டும் அதனை உறுதி செய்யுங்கள் என ஒ.செகளிடம் வலியுறுத்தி, கண்காணித்துக் கொண்டுள்ளார் வேலு. வெளியூர் சுற்றுலாவில் உள்ள கவுன்சிலர்களை ஊர் திரும்பிச்சொல்லி உத்தரவிட்டுள்ளனர் இரண்டு கட்சி நிர்வாகிகளும். ஜனவரி 10ந்தேதி தங்களது ஊர்களுக்கு திரும்பும் எல்லா கவுன்சிலர்களும் ஜனவரி 11ந்தேதி காலை நேரடியாக தாங்கள் வெற்றி பெற்ற ஒன்றியங்களுக்கு சென்று மறைமுக தேர்தல் மூலம் தலைவர் மற்றும் துணை தலைவரை தேர்வு செய்யவுள்ளனர்.