Skip to main content

விவசாயியைக் கொன்ற யானை! 

Published on 23/09/2023 | Edited on 23/09/2023

 

Farmer passes away by elephant

 

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அருகே புதுவடவள்ளி அட்டமொக்கை பகுதியைச் சேர்ந்தவர் ராமசாமி(63). விவசாயி. இவருக்கு திருமணமாகி, இரண்டு மகள்கள், ஒரு மகன் உள்ளனர். அனைவருக்கும் திருமணமாகி தனியாக வசித்து வருகின்றனர்.

 

ராமசாமி, அதே பகுதியில் சொந்தமாக ஒன்றரை ஏக்கர் நிலம் வைத்து பயிரிட்டுள்ளார். வனப்பகுதியை ஒட்டிய பகுதி என்பதால் அடிக்கடி யானை ஊருக்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வந்தது. இதை அடுத்து விவசாயிகள் இரவு நேரங்களில் தங்கள் தோட்டங்களில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

 

அதன்படி ராமசாமி நேற்று இரவு வழக்கம் போல் தனது விவசாய தோட்டத்திற்கு பாதுகாப்பு பணிக்கு வந்தார். தோட்டத்தில் அவர் நாய் வளர்த்து வந்தார். இந்நிலையில் நள்ளிரவு ஒரு மணி அளவில் ராமசாமி தோட்டத்தில் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது நாய் குரைக்கும் சத்தம் கேட்டு திடுக்கிட்டு எழுந்து வெளியே வந்தார். அப்போது ஒற்றை யானை வனப்பகுதியை விட்டு வெளியேறி ராமசாமி தோட்டத்திற்குள் வந்து பயிர்களை சேதப்படுத்திக் கொண்டிருந்தது. 

 

யானையைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த ராமசாமி, தப்பியோட முயன்றார். ஆனால் அதற்குள் யானை அவரை தூக்கி வீசி அவரது காலில் மிதித்தது. இதில் சம்பவ இடத்திலேயே ராமசாமி பரிதாபமாக இறந்தார்.

 

இதுகுறித்து சத்தியமங்கலம் போலீசார் மற்றும் சத்தியமங்கலம் வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் ராமசாமி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். யானை தாக்கி உயிரிழந்த ராமசாமி குடும்பத்தினருக்கு வனத்துறை சார்பில் முதற்கட்டமாக ரூ.50 ஆயிரம் நஷ்ட ஈடு வழங்கப்பட்டது. தொடர்ந்து மீதி தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என வனத்துறையினர் தெரிவித்தனர். விவசாயியை யானை மிதித்துக் கொன்ற சம்பவம் அப்பகுதியில் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்