விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் மோகன் அதிரடி நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார். கடந்த சில நாட்களாக ஆதிதிராவிடர் மாணவ மாணவிகள் விடுதிகளில் அங்கு தங்கி படித்து வரும் பிள்ளைகளுக்கு தரமான உணவு வழங்கப்படுகிறதா என்பதை பல்வேறு பகுதிகளுக்கு நேரடியாக சென்று ஆய்வு செய்தவர், அவரும் மாணவ மாணவியருடன் அமர்ந்து விடுதிகளில் உணவு தரமாக உள்ளதா என்பதை சாப்பிட்டும் பார்த்தார். மேலும், அங்கு பணி செய்யும் விடுதி வார்டன்கள், சமையலர் போன்றவர்களுக்கு அறிவுரை வழங்கி வருகிறார்.
நேற்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைகேட்பு கூட்டம் நடைபெற்றது. அப்போது அத்தியூர் திருக்கை கிராமத்தைச் சேர்ந்த விவசாயி அண்ணாமலை விழுப்புரத்தில் இயங்கிவரும் உரம் விற்பனை செய்யும் கடைகளில் அரசு நிர்ணயித்துள்ள விலையை விட கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்படுவதாக கூறினார். இதையடுத்து மாவட்ட ஆட்சியர் மோகன், விவசாயி அண்ணாமலையிடம் ரூ.500 கொடுத்து ஏதாவது ஒரு உரக்கடைக்கு சென்று உரத்தை வாங்குமாறு கூறி அனுப்பினார்.
அதேசமயம், வருவாய் கோட்டாட்சியர் நேர்முக உதவியாளர் வெங்கடசுப்ரமனியன், வட்டாட்சியர் ஆனந்தகுமார் லட்சுமிபதி ஆகியோர் அடங்கிய குழுவினரை விவசாயி அண்ணாமலையை பின்தொடர்ந்து செல்லுமாறு அனுப்பி வைத்தார். அந்தக் குழுவினர் கண்காணித்தபடி அண்ணாமலையை பின்தொடர்ந்து சென்றனர். மாவட்ட ஆட்சியர் கொடுத்த பணத்துடன் மார்க்கெட் கமிட்டி அருகிலுள்ள ஒரு உரக்கடைக்கு சென்றார் அண்ணாமலை. அங்கு ஒரு மூட்டை யூரியா விலைக்கு கேட்டார் அண்ணாமலை. யூரியா ஒரு மூட்டை 266 ரூபாய்க்கு விற்பனை செய்யவேண்டியதை, 370 ரூபாய் என்று கூறி கூடுதல் விலைக்கு அந்த கடைக்காரர் விற்பனை செய்தார்.
அப்போது மாவட்ட ஆட்சியர் அனுப்பிவைத்த குழுவினர் நேரடியாக இதைப் பார்த்தனர். உடனடியாக மாவட்ட ஆட்சியருக்கு தகவல் தெரிவித்தனர். அவரது உத்தரவின் பேரில் அந்த கடைக்கும், அவரது உர குடோனுக்கும் சீல் வைத்தனர். விவசாயி கோரிக்கையை ஏற்று உண்மையைக் கண்டறிந்து நடவடிக்கை எடுத்த மாவட்ட ஆட்சியருக்கு அவர் அனுப்பி வைத்த குழுவினருக்கும் விவசாயிகள் தரப்பில் நன்றி தெரிவித்து கொண்டனர்.