சென்னையில் சொத்து வரி செலுத்தாத கடைகளுக்கு மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்து நோட்டீஸ் ஒட்டி சென்றுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை தி.நகர், பாண்டி பஜார், உஸ்மான் சாலை உள்ளிட்ட பல இடங்களில் சொத்து வரி செலுத்தாத கடைகளுக்கு மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்தததுடன் நோட்டீஸ் ஒட்டி சென்றுள்ளனர். தி.நகரில் மட்டும் 39 கடைகளில் மொத்தமாக 90 லட்சம் ரூபாய் சொத்து வரி செலுத்தவில்லை என அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது. சொத்து வரியை செலுத்த வேண்டும் என பலமுறை அறிவிப்புகள் கொடுக்கப்பட்டும் தற்பொழுது வரை சொத்து வரி நிலுவையில் இருப்பதால் தற்போது இந்த அதிரடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மொத்தமாக 15 மாநகராட்சி மண்டலங்களிலும் நிலுவையில் உள்ள சொத்து வரியை வசூலிக்கும் பணியை மாநகராட்சி அதிகாரிகள் தீவிரமாக மேற்கொண்டு வரும் நிலையில், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ரங்கநாதன் தெருவில் உள்ள சண்முகா ஸ்டோர்ஸ் 35 லட்சம் ரூபாய் சொத்து வரி நிலுவை தொகை வைத்துள்ளதாக அக்கடைக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. அதேபோல் சரவணா ஸ்டோர்ஸ் கடையின் சொத்து வரி நிலுவைத் தொகை 30.25 லட்சம் ரூபாய் எனவும் அதிகாரிகள் தரப்பிலிருந்து கூறப்பட்டுள்ளது.