ஆன்லைன் வர்த்தக மோசடியில் ஏமாந்த குடும்பப் பெண் குறித்த சம்பவம் சமீபகாலங்களாக அதிகரித்துள்ளதால், ஆன்லைன் வர்த்தகத்தில் பொருட்கள் வாங்குவது குறைந்துவருகிறது. படித்தவர்கள், இளைஞர்கள், கல்லூரி - பள்ளி மாணவிகள், படித்த குடும்பப் பெண்கள் என இப்படிப்பட்டவர்கள் மத்தியில் ஆன்லைன் வர்த்தகம் அமோகமாகப் பரவியிருக்கிறது. ஆன்லைன் வர்த்தகம் மூலமே தங்களுக்குத் தேவையான அனைத்துப் பொருட்களையும் வாங்கிக் குவிக்கிறார்கள். வீட்டு உபயோக பொருட்கள், துணிகள், ஆடம்பரப் பொருட்கள், வாசனைப் பொருட்கள், செல்ஃபோன்கள் என அனைத்துவிதமான பொருட்களும் ஆன்லைன் மூலம் ஆர்டர் கொடுத்து வாங்குகிறார்கள்.
நகரம் முதல் கிராமங்கள்வரை, முதுகிலே விமானத்திலிருந்து பாராசூட்டை கட்டிக்கொண்டு குதித்து சாகசம் செய்யும் ராணுவ வீரர்களைப் போல ஆன்லைன் மூலம் ஆர்டர் செய்யும் பொருட்களை சம்பந்தப்பட்டவர்களிடம் கொண்டு சேர்க்கும் இளைஞர்கள் டூவீலர்களில் அவற்றை சுமந்துகொண்டு பார்க்கும் இடங்களிலெல்லாம் சுற்றிக்கொண்டிருக்கிறார்கள். இப்படி ஆன்லைன் வர்த்தகம் மூலம் தன் வங்கியிலிருந்து பணத்தைப் பறிகொடுத்துவிட்டு தவிக்கிறார் ஒரு பெண்மணி. ஆம், கடலூர் மாவட்டம் பெண்ணாடம் அருகே உள்ளது முருகன்குடி கிராமம். இந்தக் கிராமத்தைச் சேர்ந்தவர் ஞானவேல். இவரது மனைவி 25 வயது ஆதிரை. இவர் எல்லோரையும் போல ஆன்லைன் வர்த்தகத்தில் ஆர்வம்கொண்டு தன் வீட்டுக்குத் தேவையான குக்கர் ஒன்றை அனுப்பிவைக்குமாறு சம்பந்தப்பட்ட கம்பெனிக்கு தனது செல்ஃபோன் மூலம் ஆர்டர் கொடுத்துள்ளார்.
அதற்கான விலை 762 ரூபாய் பணத்தை அவர்கள் வங்கிக் கணக்கிற்கு தன் வங்கி கணக்கில் இருந்து ஆதிரை பணப்பரிமாற்றம் செய்துள்ளார். ஆனால், அவர் கேட்ட குக்கர் மட்டும் வரவில்லை. ஒருவாரம் கடந்ததும் சம்பந்தப்பட்ட கம்பெனிக்கு ஃபோன் செய்து “பணம் செலுத்தியுள்ளேன் ஆனால், குக்கர் வரவில்லை” என்று கேட்டுள்ளார் ஆதிரை. அவர்கள் “இதோ இன்னும் சில நாட்களில் அனுப்பி வைக்கப்படும்” என்று பதில் கூறியுள்ளனர். அந்த சில நாட்கள் கடந்தும் அவருக்கு குக்கர் வந்து சேரவில்லை. இதையடுத்து மீண்டும் அந்தக் கம்பெனிக்கு ஃபோன் செய்த ஆதிரை, “எனக்கு குக்கர் வந்து சேரவில்லை. நீங்கள் குக்கர் அனுப்ப வேண்டாம். நான் தங்கள் வங்கிக் கணக்கிற்கு அனுப்பி எனது பணம் 762 ரூபாய் பணத்தை எனக்கு அனுப்பிவிடுங்கள்” என்று கூறியுள்ளார். “பணத்தைத் திருப்பி அனுப்பி விடுகிறோம்” என்று கம்பெனி நிர்வாகத்தினர் தரப்பில் பேசியவர்கள் ஆதிரையின் வங்கிக் கணக்கு எண் மற்றும் மொபைல் எண்ணை கேட்டுள்ளனர்.
அதன்படி இவர் தனது வங்கிக் கணக்கு எண் மற்றும் மொபைல் எண்ணை அவர்களிடம் தெரிவித்துள்ளார். இதன் பிறகு சுமார் அரை மணி நேரத்தில் ஆதிரை வங்கிக் கணக்கில் இருந்து 22 ஆயிரம் பணம் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் செல்ஃபோன் எண்ணுக்கு குறுஞ்செய்தி வந்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர் பதற்றத்துடன் அவர் கணக்கு வைத்துள்ள வங்கிக்குச் சென்று கேட்டுள்ளார். ஆதிரை அங்கிருந்த ஊழியர்களிடம் “என் கணக்கில் இருந்து 22 ஆயிரம் பணம் எடுக்கப்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளார். பின்னர் ஆன்லைன் வர்த்தகம் சம்பந்தமாக செல்ஃபோன் எண், வங்கிக் கணக்கு எண் கேட்ட அந்த மர்ம நபர்கள்தான் பணத்தை நூதன முறையில் மோசடி செய்தது தெரியவந்துள்ளது. இதையடுத்து ஆதிரை பெண்ணாடம் காவல் நிலையத்தில் இது சம்பந்தமாக புகார் கொடுத்துள்ளார். காவல் நிலைய இன்ஸ்பெக்டர் குமார் உள்ளிட்ட போலீசார் ஆதிரையின் புகார் மீது வழக்குப் பதிவுசெய்து ஆன்லைன் வர்த்தகம் மோசடி மூலம் பணம் பறித்தது குறித்து விசாரணை நடத்திவருகின்றனர்.