Skip to main content

கிருஷ்ணகிரி அரசுப்பள்ளி ஆசிரியர் சஸ்பெண்ட்!; மாணவர்கள் 'நீல் டவுன்' போராட்டம்

Published on 09/09/2018 | Edited on 09/09/2018
s


கிருஷ்ணகிரி அருகே அரசு உயர்நிலைப்பள்ளி ஆசிரியரை முதன்மைக் கல்வி அலுவலர் எந்தவித விசாரணையுமின்றி சஸ்பெண்ட் செய்துள்ள சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.


கிருஷ்ணகிரி மாவட்டம் கும்மனூரில் அரசு உயர்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் கணித பாட ஆசிரியராக பணியாற்றி வருபவர் ஜெயபிரகாஷ் (55). கடந்த 5 ஆண்டுகளாக இப்பள்ளியில் பணியாற்றி வருகிறார். 


இந்நிலையில், கிருஷ்ணகிரி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மகேஸ்வரி, திடீரென்று ஆசிரியர் ஜெயபிரகாஷை இன்று சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளார். அந்த உத்தரவில், பெற்றோர் ஆசிரியர் கழகம், மாணவர்கள், ஊர்மக்கள் அளித்த புகாரின்பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. 


ஆனால், புகார் மனுக்களின் உள்விவகாரங்கள் குறித்து விரிவான விளக்கம் சொல்லப்படவில்லை. மேலும், புகார்கள் தொடர்பாக அவரிடம் துறை ரீதியான விசாரணை நடத்தப்படவில்லை. விளக்கம் கேட்டு குற்றச்சாட்டு குறிப்பாணைகளும் வழங்கப்படவில்லை. வழக்கமான சம்பிரதாயமான நடவடிக்கைகளை தவிர்த்துவிட்டு, திடீரென்று ஆசிரியர் ஜெயபிரகாஷை சஸ்பெண்ட் செய்துள்ளதற்கு ஆசிரியர்கள் மத்தியில் கடும் அதிருப்தி எழுந்துள்ளது. 


இதற்கிடையே, ஆசிரியர் ஜெயபிரகாஷ் மீதான நடவடிக்கையை எதிர்த்தும், அவரை மீண்டும் பள்ளியில் சேர்க்கக் கோரியும் பள்ளி மாணவ, மாணவிகள் முட்டிக்காலிட்டு நூதன முறையில் போராட்டம் நடத்தினர். இதுகுறித்து காவல்துறை மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகளும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


 

சார்ந்த செய்திகள்