நாமக்கல் மாவட்டம் மோகனூர் மேட்டுத் தெருவைச் சேர்ந்தவர் தில்லைக் குமார். 35 வயதான இவர் பட்டாசு வியாபாரம் செய்து வருகிறார். இவருக்குச் சொந்தமாக ஓடப்பாளையத்தில் பட்டாசு குடோன் உள்ளது.
ஆங்கிலப் புத்தாண்டினை ஒட்டி சிவகாசியில் இருந்து விற்பனைக்காக பட்டாசுகளை வாங்கிய தில்லைக் குமார் அதை வீட்டிலேயே வைத்திருந்துள்ளார். இந்நிலையில் இன்று அதிகாலை வீட்டிலிருந்த பட்டாசுகள் வெடித்துச் சிதறியது. பற்றி எரிந்த தீயினால் வீட்டிலிருந்த சிலிண்டர் வெடித்தது. இதனால் அடுத்தடுத்து இருந்த 5 வீடுகள் சேதமடைந்தன.
அக்கம் பக்கத்தினர் உடனடியாக காவல்துறை மற்றும் தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்ததும் உடனடியாக வந்த தீயணைப்புத் துறையினர் தீயினை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். 3 மணி நேரம் போராடி தீ அணைக்கப்பட்டது. இதன் பின் தீ விபத்தில் சிக்கி இருந்தவர்களை மீட்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டது.
தில்லைக் குமார் உடல் கருகி இறந்து கிடந்த நிலையில் அவரது மனைவி மற்றும் அவரது தாயாரும் சடலமாக மீட்கப்பட்டனர். மேலும் பக்கத்து வீட்டைச் சேர்ந்த மூதாட்டியும் உயிரிழந்தது மீட்புப் பணியின் போது தெரிய வந்தது. மீட்கப்பட்ட 4 உடல்களையும் பிரேதப் பரிசோதனைக்காக நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு காவல்துறையினர் அனுப்பி வைத்தனர்.
அக்கம் பக்கத்து வீடுகளைச் சேர்ந்த சிலரும் படுகாயங்களுடன் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தில்லைக் குமாரின் 4 வயது மகள் சஜினியை பக்கத்து வீட்டு வாலிபர்கள் லேசான காயங்களுடன் மீட்டுள்ளனர். குழந்தை தற்போது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.