நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் காவல் ஆய்வாளர் தவமணி தலைமையில் பள்ளிபாளையம் பிரிவு சாலையில் நேற்று மாலையில் காவல்துறையினர் வாகனச் சோதனையில் ஈடுபட்டு வந்தனர். அப்போது அந்த சாலையில் காவி உடை அணிந்து சாமியார் போன்ற தோற்றத்தில் ஒருவர் தனது இரண்டு சீடர்களுடன் வந்திருக்கிறார். மேலும் அவர்கள், அந்த வழியில் உள்ள கடைகளில் புகுந்து அங்குள்ள நபர்களுக்கு திருநீறு பூசி வந்திருக்கிறார்கள்.
இந்த மூவரின் நடவடிக்கையை கவனித்த காவல்துறையினர், அவர்கள் மீது சந்தேகம் கொண்டு அவர்களைத் தடுத்து நிறுத்தி விசாரித்தனர். அப்போது, சாமியார் தோற்றத்தில் இருந்த நபர், தனது பெயர் ஜிக்லினத் அகோரி என்று காவல்துறையினரிடம் கூறியிருக்கிறார். மேலும், அவர்களிடம் காசியில் உள்ள அகோரியிடம் பயிற்சி பெற்றதாகத் தனது அடையாள அட்டையையும் கொடுத்திருக்கிறார். அடையாள அட்டையைப் பார்த்த காவல்துறையினருக்கு சாமியார் மீது சந்தேகம் வலுத்து அவரிடம் கிடுக்குப்பிடி விசாரணையை மேற்கொண்டனர்.
அந்த விசாரணையில், சாமியார் வேடத்தில் இருந்தவர் சேலம் மாவட்டம், கன்னங்குறிச்சியைச் சேர்ந்த முஸ்தபா என்கிற முகமது ஜிகாத்(36) என்பது தெரியவந்துள்ளது. இவர் மீது சேலம், ராசிபுரம், திருச்செங்கோடு, திருப்பூர் ஆகிய காவல்நிலையங்களில் 10 கொலை வழக்குகள் உள்ள அதிர்ச்சியான தகவல் தெரியவந்துள்ளது. கொலை வழக்குகளில் தொடர்புள்ள முகமது ஜிகாத்தை காவல்துறையினர் தேடி வந்ததையடுத்து காசியில் சில ஆண்டுகள் தலைமறைவாக இருந்துள்ளார். அதன்பின், அங்கு அகோரி என்ற பெயரில் போலி சாமியாராகச் சுற்றியுள்ளார். இதனிடையே, திருச்சியைச் சேர்ந்த கலைமணி(45) என்ற பெண்ணும், கடலூரைச் சேர்ந்த சீனிவாசன்(35) ஆகிய இருவரையும் தனது சீடர்களாக்கி தமிழ்நாட்டில் பல இடங்களில் தலைமறைவாகச் சுற்றி வந்துள்ளார் என்று தெரியவந்துள்ளது.
இதையடுத்து காவல்துறையினர், போலி சாமியாரை கைது செய்து திருச்செங்கோடு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினார்கள். வழக்கை விசாரித்த நீதிபதி, போலி சாமியாரை 15 நாட்கள் காவலில் வைத்து விசாரிக்குமாறு உத்தரவிட்டார்.