![Fake preacher arrested under POCSO Act in Ramanathapuram](http://image.nakkheeran.in/cdn/farfuture/DgkZie5JSQ9ypPc1FzGZ1xxfkGrKeN82Y8eTcB0adng/1669355007/sites/default/files/inline-images/996_56.jpg)
ராமநாதபுரம் மாவட்டம், ஆர்.எஸ்.மங்கலம் பகுதியை சேர்ந்தவர் அர்ஜுன்(பெயர் மாற்றப்பட்டது). 36 வயதான இவர், சென்னையில் கூலி வேலை செய்து வருகிறார். அர்ஜுன், ஊஞ்சலை பகுதியை சேர்ந்த செல்வகுமாரி(பெயர் மாற்றப்பட்டது) என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதிக்கு 10 வயது மகன், 8 வயது மகள் என இரு குழந்தைகள் இருக்கின்றன.
இந்நிலையில், அர்ஜுனின் மனைவி செல்வகுமாரி, திருப்பத்தூர் அருகே உள்ள வேட்டங்குடிப்பட்டி கிராமத்தில் வசிக்கும் ராமகிருஷ்ணன் என்பவரிடம், தனது கணவருக்கு சரியான வேலை அமையவில்லை என குறி பார்க்கச் சென்றுள்ளார். அப்போது செல்வகுமாரிக்கும் மாந்திரீக சாமியார் ராமகிருஷ்ணனுக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் சாமியார் ராமகிருஷ்ணனைப் பார்க்க அடிக்கடி சென்றுவந்த செல்வகுமாரி அவரிடம் தொடர்ந்து குறி பார்த்துள்ளார்.
இந்நிலையில், அந்த மாந்திரீக சாமியார் ராமகிருஷ்ணன், செல்வகுமாரியிடம் ரசமணி ஒன்றைக் கொடுத்து, இதை கழுத்தில் அணிந்து கொண்டால் விரைவில் நீ கோடீஸ்வரி ஆகிடலாம். உன்னுடைய குடும்பப் பிரச்சனை தீரும் என ஆசை வார்த்தைகள் கூறியுள்ளார். அதுமட்டுமல்லாமல் உன்னுடைய 8 வயது மகளுக்கு, அமாவாசை இரவு சிறப்பு பூஜை செய்தால் குடும்பத்தில் செல்வம் பெருகும் என ஆசை வார்த்தைகளால் செல்வகுமாரியை வசியம் செய்துள்ளார். இதை உண்மையென நம்பிய செல்வகுமாரி காரைக்குடி, மானகிரி காட்டுப் பகுதியில் உள்ள மாந்திரீக சாமியாரின் ஆசிரமத்திற்கு, தனது 8 வயது மகளை அழைத்துச் சென்றுள்ளார். அன்றைய இரவு அமாவாசை பூஜையில், அந்த அப்பாவி 8 வயது சிறுமியை, நிர்வாணமாக அமர வைத்த மாந்திரீக சாமியார், ஈவிரக்கமின்றி அந்தச் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படுகிறது.
இதற்கு அவரின் தாய் செல்வகுமாரியும் உடந்தையாக இருந்துள்ளார். இதையடுத்து, பாதிக்கப்பட்ட சிறுமி, நடந்ததை தந்தையிடம் கூறியுள்ளார். அதிர்ச்சியடைந்த தந்தை, மாவட்ட குழந்தைகள் நல அலுவலகத்தில் புகார் அளித்தார். அதன் அடிப்படையில், திருப்பத்தூர் எஸ்.பி. ஆத்மநாபன், இன்ஸ்பெக்டர் சுந்தர மகாலிங்கம் ஆகியோர் இந்தச் சம்பவம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். பின்னர், போலி மாந்திரீக சாமியார் ராமகிருஷ்ணன் மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த சிறுமியின் தாய் செல்வகுமாரி ஆகிய இருவரையும் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைந்தனர்.
தனது குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்வதற்கு பெற்ற தாயே துணைபோன சம்பவம் ராமநாதபுரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.