திருச்சி மணிகண்டம் அருகே நாகமங்கலம் யாகப்புடையான்பட்டியில் சிலர் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து அங்கு போலி மதுபான ஆலை நடத்தி வருவதாக தமிழக சிஐயூ பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் சுஜாதா தலைமையிலான போலீசார் அங்கு சென்று அந்த வீட்டுக்குள் புகுந்து அதிரடியாக சோதனை நடத்தினர்.
அங்கு சுமார் 1,500 மது பாட்டில்கள், மூன்று பேரல்களில் அடைக்கப்பட்டிருந்த 150 லிட்டர் மதுபானம், 20 கேன்களில் எரிசாராயம், 50 ஆயிரம் பாட்டில் மூடிகள், போலி லேபிள்கள், எந்திரம் உள்ளிட்ட ஏராளமான பொருட்கள் இருந்தன. உடனே இது குறித்து மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். திருவெறும்பூர் மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் மீராபாய் தலைமையிலான போலீசார் அங்கு வந்து போலி மதுபான ஆலையில் இருந்த அனைத்து பொருட்களையும் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக அங்கிருந்த 4 பேரையும் பிடித்து விசாரணை நடத்தினார்கள். அப்போது சமயபுரம் பகுதியில் வசிக்கும் ஒருவரிடமிருந்து அந்த வீட்டை வாடகைக்கு எடுத்து போலி மதுபான ஆலை நடத்தி வந்தது தெரியவந்தது. மேலும், அங்கிருந்த ஒரு கார், இருசக்கர வாகனம் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன.