திண்டுக்கல் மாநகரின் மையப் பகுதியில் பிரசித்தி பெற்ற செல்லாண்டியம்மன் கோவில் உள்ளது. இக்கோவில் அபிராமி அம்மன் கோயில் கட்டுப்பாட்டில் இருந்துவருவதால், தற்போது இக்கோவிலில் பராமரிப்பு பணிகள் நடந்துவருகின்றன. இப்படி பணிகள் நடந்துவரும் வேளையில், கோவில் அருகே உள்ள இடங்களை ஆய்வுசெய்தபோது அந்த இடங்கள் செல்லாண்டியம்மன் கோவிலுக்குப் பாத்தியப்பட்டது என்று தெரியவந்தது.
இது சம்மந்தமாக செல்லாண்டியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த கோவில் கமிட்டி நிர்வாகிகளும், பொதுமக்களும் இந்து அறநிலையத்துறை இணை ஆணையர் பாரதி, உதவி ஆணையர் அனிதா மற்றும் அபிராமி அம்மன் கோவில் செயல் அலுவலர் மகேஸ்வரி ஆகியோரிடம் புகார் மனு கொடுத்தனர். அதைத்தொடர்ந்து இந்து அறநிலையத்துறை சார்பில் வழக்கு தொடரப்பட்டு, இடத்தை ஆக்கிரமிப்பு செய்த எதிர்தரப்பான சதாமிர்தம்மாளுக்கு நோட்டீஸ் கொடுக்கப்பட்டு, 90 நாட்களில் கோவிலுக்குச் சொந்தமான இடத்தை (வீடு) காலி செய்து கொடுக்குமாறு நோட்டீஸ் அனுப்பப்பட்டது.
அப்படியிருந்தும் எதிர் தரப்பினர் கோவிலுக்குச் சொந்தமான வீட்டைக் காலி செய்யாததால், அந்த வீடு கோவில் இடத்தில் ஆக்கிரமிப்பு செய்து போலி பத்திரம் தயார் செய்து கட்டியிருப்பதாகவும் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இதனையடுத்து இந்து அறநிலையத்துறை இணை ஆணையர் பாரதி உத்தரவின் பேரில், உதவி ஆணையர் அனிதா மற்றும் அபிராமி அம்மன் கோவில் செயல் அலுவலர் மகேஸ்வரி தலைமையிலான அதிகாரிகளும், போலீசாரும் செல்லாண்டியம்மன் கோவிலுக்கு சொந்தமான இடத்திலிருந்த வீட்டைக் கையகப்படுத்தி சீல் வைத்தனர்.
70 வருடங்களுக்கு முன்பு போலி பத்திரம் தயார் செய்து கோயில் இடத்தை ஆக்கிரமிப்பு செய்து கட்டப்பட்ட வீடு அகற்றப்பட்டதால் செல்லாண்டியம்மன் கோவில் தெரு மக்கள் மகிழ்ச்சியடைந்ததோடு அறநிலையத்துறை அதிகாரிகளைப் பாராட்டினார்கள். இதேபோல், இந்த செல்லாண்டியம்மன் கோவில் அருகே இருந்த இடத்தை ஆக்கிரமிப்பு செய்தவரிடமிருந்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு மீட்டனர். அதை தொடர்ந்து அறநிலையத்துறை அதிகாரிகள், அதன் அருகே இருந்த இந்த வீட்டையும் கையகப்படுத்தியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் கோவிலுக்குச் சொந்தமான மற்றொரு இடத்தை ஆக்கிரமிப்பு செய்து, வீடு கட்டியிருப்பதையும் அகற்ற வேண்டும் என்று பக்தர்களும், அப்பகுதி மக்களும் கோரிக்கை வைத்துவருகிறார்கள்.