புதுச்சேரியில் போலி ஏடிஎம் கார்டுகள் மூலம் வங்கி கணக்குகளில் இருந்து பணம் மோசடி செய்தது தொடர்பாக அரசு மருத்துவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த சில மாதங்களாக புதுச்சேரியில் போலி ஏடிஎம் கார்டுகள் மூலம் வங்கிக்கணக்குகளில் பணம் திருடப்படுவதாக வந்த புகார்களின் மீது போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். பின்பு புதுச்சேரி சிபிஐ-க்கு இந்த வழக்கு மாற்றப்பட்டது. புதுச்சேரி சிபிஐ போலீஸார் நடத்திய விசாரணையில் புதுவை சிட்டன்குடியில் கம்ப்யூட்டர் சென்டர் நடத்தி வந்த பாலாஜி மற்றும் ஜெயச்சந்திரன் என்ற இருவரை கடந்த 19-ஆம் தேதி கைது செய்து அவர்களிடம் இருந்து போலி ஏடிஎம் கார்டுகள் ஸ்கிம்மர்கள் போன்றவைகளை கைப்பற்றி விசாரித்தனர்.
இந்த விசாரணையில் சர்வதேச குற்றவாளிகள் மற்றும் உள்ளூர் குற்றவாளிகள் என பலர் இருப்பதாக சந்தேகித்து போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டு கடலூரை சேர்ந்த கமல், சென்னையை சேர்ந்த சியாம் என்ற இருவரையும் கைது செய்தனர்.
தற்போது இன்று காலை புதுவை கிருமம்பாக்கம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய தற்காலிக மருத்துவர் விவேக் என்பவரையும் இது தொடர்பாக கைது செய்துள்ளனர்.