
உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவிலிருந்து தென்னிந்தியாவில் சாமி தரிசனம் செய்வதற்காக 60க்கும் மேற்பட்ட பக்தர்கள் லக்னோ - ராமேஸ்வரம் யாத்திரை சுற்றுலா ரயில் மூலம் கடந்த ஆகஸ்ட் 17 ஆம் தேதி தமிழகம் வந்திருந்தனர். நேற்று நாகர்கோவிலில் பத்மநாபா கோவிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு இன்று மதுரை வந்தடைந்த இந்த ரயில் மதுரை ரயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த போது ரயில் பெட்டியில் திடீரென தீப்பற்றி எரிந்துள்ளது. இந்த ரயிலில் வந்த பயணிகள் சமைத்துச் சாப்பிடுவதற்காக சிலிண்டரை எடுத்து வந்துள்ளனர். இன்று காலை டீ போடுவதற்குப் பயணிகள் சிலிண்டர் பற்ற வைத்தபோது தீ விபத்து ஏற்பட்டுள்ளது என விசாரணையில் தெரியவந்துள்ளது.
மேலும் அவர்கள் மூன்று சிலிண்டர்கள் மற்றும் விறகுகளும் வைத்திருந்ததால் தீ மளமளவெனப் பற்றியதில் அந்த ரயில் பெட்டி முழுவதும் தீப்பற்றியது. இதில், 2 பெண்கள் உள்பட 9 பேர் உயிரிழந்துள்ளனர். பலர் காயம் அடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவர்களுக்கு சிறப்பு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் இறந்தவர்களின் குடும்பத்திற்கு தமிழக அரசு சார்பில் தலா ரூ. 3 லட்சமும், ரயில்வே நிர்வாகம் சார்பில் தலா ரூ.10 லட்சமும் நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விபத்து குறித்து உ.பி மாநிலம் சீதாப்பூரைச் சேர்ந்த தனியார் சுற்றுலா நிறுவனம் மீது வழக்குப் பதிவு செய்ய தென்னக ரயில்வே போலீசார் லக்னோ போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளனர். இந்த நிறுவனத்தின் மேலாளர் முதல் குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அதே சமயம் ரயில் தீ விபத்தில் இறந்த 9 பேரின் உடல்களும் இன்று இரவு பாண்டியன் எக்ஸ்பிரஸ் ரயில் மூலம் மதுரையில் இருந்து சென்னை கொண்டு வரப்படுகிறது. சென்னையில் இருந்து 9 பேரின் உடல்களும் விமானம் மூலம் லக்னோவுக்கு நாளை அனுப்பி வைக்கப்பட உள்ளது.

இந்நிலையில் இந்த விபத்து குறித்து மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் கூறுகையில், “மதுரையில் நடைபெற்ற ரயில் விபத்திற்கு ரயில்வே பாதுகாப்பு படையின் தோல்வியே முழு காரணம் என்று ரயில்வே ஆலோசனை குழுவின் உறுப்பினர் என்ற முறையில் குற்றம் சாட்டுகிறேன். ரயில் நிலையங்களில் உள்ள கடைகளில் கேஸ் அடுப்பு பயன்படுத்த கூடாது. மின்சார அடுப்புதான் பயன்படுத்த வேண்டும். தீப்பிடிக்க கூடிய எந்த பொருளையும் ரயிலில் கொண்டு செல்லக்கூடாது என்ற விதியுள்ளது. இந்த விபத்திற்கு சொல்லப்படும் காரணம் ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது. தனி நபர் கொண்டு வந்த ஒரு பொருளால் மட்டும் இந்த விபத்து ஏற்படவில்லை. கேஸ் சிலிண்டர்களோடு கடந்த பத்து நாட்களாக ஒரு பயணிகள் பெட்டி தென்னிந்தியாவில் பயணித்திருக்கிறது. எந்த ரயில் நிலையத்திலும் அந்த பெட்டி ஆய்வு செய்யப்படவில்லை. இந்த விபத்து ரயில் பயணத்தின் பொழுது நிகழ்ந்திருந்தால் எவ்வளவு பெரிய விபத்தாக மாறி இருக்கும். இந்த விபத்திற்கு ரயில்வே பாதுகாப்பு துறையின் தோல்வியே முழு காரணம்” என தெரிவித்துள்ளார்.