தமிழ்நாட்டில் ‘மிக்ஜாம்’ புயல் காரணமாக வரலாறு காணாத மழைப்பொழிவு ஏற்பட்டது. இதன் காரணமாகச் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் மிகக் கடுமையான அளவிற்கு வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த பாதிப்புகளிலிருந்து பொதுமக்களை மீட்கவும், அவர்களுக்குத் தேவையான நிவாரண உதவிகளை வழங்கிடவும் தமிழ்நாடு அரசு போர்க்கால அடிப்படையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
அந்த வகையில் தேசிய மற்றும் மாநிலப் பேரிடர் மீட்புக் குழுவினர், காவல்துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறைகளைச் சார்ந்த மீட்புப் பணிக் குழுவினர் இப்பணிகளில் பெருமளவில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். படகுகள் மற்றும் வாகனங்கள் மூலமாக நீர் சூழ்ந்த பகுதிகளிலிருந்து பொதுமக்கள் பத்திரமாக மீட்கப்பட்டு வருகிறனர். மேலும் அவர்களுக்குத் தேவையான உதவிகளும் வழங்கப்பட்டு வருகின்றன.
இந்த சூழலில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் மின் கட்டணம் செலுத்த நாளைய (07.12.2023) தினம் கடைசி நாளாக இருந்தது. இதனால் மின் கட்டணம் செலுத்துவதற்கான கால அவகாசத்தை நீட்டிக்கக் கோரி பொதுமக்கள், அரசியல் கட்சித் தலைவர்கள் எனப் பலரும் கோரிக்கை வைத்திருந்தனர். இந்நிலையில் புயலால் பாதிக்கப்பட்ட சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் அபராதம் இல்லாமல் டிசம்பர் 18 ஆம் தேதி வரை மின் கட்டணம் செலுத்தலாம் எனக் கூடுதல் கால அவகாசம் வழங்கி மின்சாரத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார்.