அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட இயற்கை விவசாயிகளுக்கு இல்லம் தேடி விருது வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சேனாபதி, கீழக்காவட்டாங்குறிச்சி, அரண்மனைக்குறிச்சி, மேட்டுத்தெரு, கண்டராதித்தம், இலந்தைக்கூடம் உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகளுக்கு இல்லம் தேடி விருதுகள் வழங்கப்பட்டன.
அதில் நாட்டு ரக மாடுகளை வளர்ப்போருக்கும், இயற்கை விவசாயத்தில் ஈடுபட்டு கருப்பு கவனி, மாப்பிள்ளைச் சம்பா சாகுபடி செய்யும் ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரி பழனிவேல், இயற்கை விவசாயத்தில் 100 ஆண்டுகள் வரை தொடர்ந்து அறுவடை செய்யும் முறையில் கரும்பு விவசாயத்தில் ஈடுபட்டுள்ள விவசாயி கண்டராதித்தம் ரவிச்சந்திரன், மின்சாரத்தை எளிய முறையில் தயாரிக்கும் முறையை கண்டறிந்த விவசாயி கண்டராதித்தம் மேட்டுத்தெரு நரசிம்மன், நாட்டு மாடு மற்றும் காளை வளர்த்து வரும் இலந்தைக்கூடம் சரவணன் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்டோருக்கு விருதுகள் வழங்கப்பட்டன.
இயற்கை விவசாயத்தில் ஈடுபடுபவர்களையும் நாட்டு ரக மாடுகளை வளர்ப்போரையும் ஊக்குவிக்கும் வகையில் நடைபெற்ற இல்லம் தேடி விருது வழங்கும் நிகழ்ச்சி அகில இந்திய மக்கள் சேவை இயக்க விவசாயப் பிரிவு மற்றும் வேந்தர் டெல்டா விவசாயிகள் சங்கம் சார்பில் நடத்தப்பட்டது. இதில் திரைப்பட பாடலாசிரியர் மருதகாசி பேரன் பேராசிரியர் ஜவகர், அகில இந்திய மக்கள் சேவை இயக்க விவசாயப் பிரிவு மாநிலத் தலைவர் தங்க சண்முக சுந்தரம், வேந்தர் டெல்டா விவசாயிகள் சங்க அரியலூர் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் பாலச்சந்திரன், ஆனந்த் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.