சிவகாசி அருகிலுள்ள விளாம்பட்டியில் பிரவீன் ராஜ் என்பவருக்குச் சொந்தமான பட்டாசு ஆலை, நாக்பூரிலுள்ள மத்திய பெட்ரோலியம் மற்றும் எரிபொருள் கட்டுப்பாட்டுத்துறையின் அனுமதி பெற்று இயங்கி வருகிறது. அந்த ஆலையில் பேன்சி ரகப் பட்டாசுகள் தயாரித்து வருகின்றனர். வழக்கம்போல் இன்றும் (15-ஆம் தேதி) 120 தொழிலாளர்கள் பட்டாசு உற்பத்தியில் ஈடுபட்டபோது, தரைச்சக்கரப் பட்டாசுக்கான ரசாயன மூலப்பொருளில் உராய்வு ஏற்பட்டு திடீரென்று வெடி விபத்து ஏற்பட்டது.
இவ்விபத்தில் இடையங்குளத்தைச் சேர்ந்த தங்கவேல் மற்றும் கருப்பசாமி ஆகியோர் பலத்த காயமடைந்ததால் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மாரித்தாய், கருப்பம்மாள் ஆகிய பெண் தொழிலாளர்களுக்கும் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இவ்விருவரும் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக சிவகாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
வெடி விபத்து குறித்து தகவலறிந்து அங்கு விரைந்த தீயணைப்புத் துறையினர் வெகு நேரம் போராடி தீயை அணைத்தனர். இரண்டு பட்டாசு உற்பத்தி அறைகள் தரைமட்டமான நிலையில், நடந்த விபத்து குறித்து மாரனேரி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.