திருவள்ளூர் மாவட்டம், பூவிருந்தவல்லி நகராட்சிக்கு உட்பட்ட முத்தமிழ் நகர், இரண்டாவது வார்டு பிரதான சாலையில் உள்ள ஒரு மின் கம்பத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. மின்கம்பத்தில் உள்ள வயர்கள் பட்டாசு போல் வெடித்துச் சிதறியது. குடியிருப்பின் வாசல் அருகே இருந்த மின்கம்பத்தில் தீவிபத்து ஏற்பட்டு வயர்கள் பயங்கர சத்தத்துடன் வெடித்துச் சிதறியது. அந்தச் சத்தம் கேட்டு, அந்த வீட்டில் இருந்த ஒரு பெண் தன் இரு குழந்தைகளுடன் பதறியடித்துக்கொண்டு வெளியே ஓடி வந்தார். இந்த காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. மேலும், வயர்கள் பயங்கர சத்தத்துடன் வெடித்துச் சிதறியதால் அந்தப் பகுதியில் இருந்த மக்கள் அலறி அடித்து வெளியே ஓட்டம் பிடித்தனர்.
சுமார் அரை மணி நேரமாகத் தொடர்ந்து பட்டாசு தீப்பொறி பறப்பது போல் தீயானது மளமளவென எரிந்து கொண்டிருந்தது. இதனை அடுத்து அருகே உள்ளவர்கள் மின்வாரியத்துக்குத் தகவல் தெரிவித்தனர். இதன் பின்னர் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டதால் அந்த தீ விபத்து கட்டுக்குள் வந்தது. இருந்தபோதிலும் மின்கம்பத்தில் இருந்த வயர்கள் தொடர்ந்து எரிந்து வந்தன. இதனை அங்கிருந்த பொதுமக்கள் மணலைக் கொண்டு தீயை முற்றிலுமாக அணைத்தனர்.
இந்த தீவிபத்து காரணமாக பூவிருந்தவல்லி இரண்டாவது வார்டு முழுவதுமாக மின்சாரம் துண்டிக்கப்பட்டது. குடியிருப்பு மத்தியில் நடைபெற்ற இந்த மின் விபத்தால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. மின் உயர் அழுத்தம் காரணமாக இந்த விபத்து ஏற்பட்டு இருக்கலாம் எனக் கூறப்படுகின்றது.