
தமிழ்நாட்டில் புதிதாய் பிரிக்கப்பட்ட ஒன்பது மாவட்டங்களுக்கான உள்ளாட்சித் தேர்தல் 6 மற்றும் 9 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டமாக நடக்கும் என அறிவிக்கப்பட்டு, முதல் கட்டமாக 6ஆம் (நேற்று) தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிவுற்றுள்ளது. இதில் பல்வேறு இடங்களில் இறுதி நேரத்தில் கூட்ட நெரிசல் ஏற்பட்டும், ஒரு இடத்தில் மக்கள் யாரும் வாக்களிக்காமல் தேர்தலைப் புறக்கணித்தது உள்ளிட்ட விஷயங்கள் நடைபெற்றன.
இந்நிலையில், விழுப்புரம் மாவட்டம், கண்டாச்சிபுரம் ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்கு தேவி ரவிக்குமார் மற்றும் ரேவதி கணபதி ஆகிய இருபெண்கள் போட்டியிட்டுள்ளனர். இவர்களுடன் இன்னும் சிலரும் அப்பதவிக்கு போட்டியிட்டுள்ளனர். இருந்தபோதிலும் இவர்கள் இருவருக்குமிடையேயான போட்டியே பிரதானமாக இருந்தது. இதில், தேவி ரவிக்குமார் என்பவர் பூட்டு சாவி சின்னத்திலும், ரேவதி கணபதி என்பவர் ஆட்டோ சின்னத்திலும் போட்டியிட்டனர்.
இந்நிலையில், நேற்று வாக்குப்பதிவு நடைபெற்றுக்கொண்டிருந்தபோது திடீரென வாட்ஸ் அப், ஃபேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களில், ஒரு வீடியோ வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த வீடியோவில், பூட்டு சாவி சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர் தேவியின் கணவர் ரவிக்குமார், ஆட்டோ சின்னத்தில் போட்டியிடும் எதிர் வேட்பாளர் ரேவதியை ஒருமையில் பேசியதாகவும் அந்த வேதனை தாங்க முடியாமல் ரேவதி அழுவது போன்றும் இருந்தது. இதனால் அங்குப் பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து ரவிக்குமார் கூறும்போது, “வாக்குச்சாவடிக்கு ஓட்டுப் போட வரிசையில் நின்றிருந்தேன். அப்போது எனது மனைவியை எதிர்த்துப் போட்டியிடும் வேட்பாளர் ரேவதி என்னிடம், “ஏன் இங்கு வந்து ஓட்டு கேட்கிறீர்கள், வெளியே செல்லுங்கள்” என்று கூறினார். அப்போது நான், “எனது வாக்கைச் செலுத்துவதற்காக வரிசையில் நிற்கிறேன். யாரிடமும் ஓட்டு கேட்கவில்லை. நீங்கள் ஏன் என்னிடம் வந்து தேவையில்லாமல் வம்பு பேசுகிறீர்கள்” என்று கேட்டேன். இதனால் வாக்குச் சாவடி வளாகத்தில் ரேவதி அழுதுகொண்டிருப்பது போன்ற வீடியோ காட்சியை அவரது ஆதரவாளர்கள் எடுத்து வெளியிட்டுள்ளனர். பின்னர் அங்கு பாதுகாப்புக்கு அந்த போலீசார் அவர்களை கலைந்து செல்லுமாறு கூறியதால் அனைவரும் கலைந்து சென்றனர்” என்று தெரிவித்தார். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.