தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே அமைந்துள்ளது லட்சுமிபுரம் ஊராட்சி. இந்த பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடேசன். இவரது மனைவி சத்தியபாமா. இந்த தம்பதிக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். இவர்கள் அனைவரும் சிந்தி அம்மன் கோவில் தெருவில் வசித்து வரும் நிலையில் கூலி வேலை செய்து வரும் இந்த தம்பதி அதில் கிடைக்கும் வருமானத்தை தங்களுடைய மகள்களின் படிப்புக்காக சேமித்து வைத்தனர்.
இந்த நிலையில், சருத்துபட்டி சாலையில் உள்ள முன்னாள் ராணுவ வீரர் பெருமாள் சாமி என்பவரின் வீட்டின் அருகே உள்ள அவருக்கு சொந்தமான கடையை வாடகை எடுத்து அதில் வெங்கடேசன் - சத்தியபாமா தம்பதியினர் தொழில் செய்து வந்தனர். அந்த சமயத்தில், பெருமாள் சாமி குடும்பத்திற்கும் வெங்கடேசன் குடும்பத்திற்கும் இடையே பழக்கம் ஏற்பட்டிருக்கிறது. சத்தியபாமா தனது மகள்களுக்காக பணம் சேர்த்து வைத்திருப்பதை பெருமாள் சாமியிடம் கூறியுள்ளார்.
அப்போது, இதை கேட்ட பெருமாள் சாமி சத்யபாமாவுக்கு யோசனை ஒன்றை கூறியிருக்கிறார். இந்த பணத்தை நிதி நிறுவனத்தில் செலுத்தி அதிக வட்டி பெற்று தருவதாக ஆசை வார்த்தைகளை கூறியுள்ளார். அந்த நேரத்தில், வெங்கடேசன் - சத்யபாமா தம்பதியினருக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ள நிலையில் அவர்களின் எதிர்காலம் கருதி கல்விச் செலவுக்காக சேர்த்து வைத்திருந்த 10 லட்ச ரூபாய் பணத்தை பெருமாள் சாமியிடம் கொடுத்துள்ளனர்.
பின்னர், பணத்தை வாங்கிக்கொண்ட பெருமாள் சாமி கடந்த ஒன்றரை ஆண்டுகளாக ஆகியும் வாங்கிய பணத்திற்கு வட்டியும் கொடுக்காமல் அசலும் கொடுக்காமல் தொடர்ந்து ஏமாற்றி வந்துள்ளார். இந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு தனது மகள் பள்ளிப்படிப்பை முடித்து கல்லூரியில் சேர்ப்பதற்காக பெருமாள் சாமியிடம் பணம் கேட்டபோது, அவர் கடனை தராமல் இழுத்தடித்து வந்துள்ளார்.
அதுமட்டுமின்றி, அவர் பேசும்போது, “எதுக்கு அந்த காலேஜ்ல படிக்கச் வெச்சிட்டு இருக்கீறீங்க. உங்க தகுதிக்கு ஏத்த காலேஜ்ல செத்துவிடுங்க. அளவுக்கு அதிகமாக ஆசைப்படாதீங்க. எனக்கு தெரிஞ்ச காலேஜ்ல பிரீயா நானே சேத்துவிடுறேன்” எனக்கூறி வாட்ஸப்பில் குறுஞ்செய்தி ஒன்றை அனுப்பியுள்ளார். இதனால் பாதிக்கப்பட்ட வெங்கடேசன் தம்பதி பல்வேறு துயரங்களுக்கு ஆளாகி வந்தனர். மேலும், பெரியசாமியிடம், “உங்களை நம்பிதான் நாங்க பணம் கொடுத்தோம், எங்கள் பணத்தை நீங்கள் தான் திருப்பி தரணும் என கேட்டதற்கு.. பணத்தையெல்லாம் கொடுக்க முடியாது. நிதி நிறுவனத்துல டெபாசிட் பண்ணி வச்சியிருக்கேன்” என அலட்சியமாக கூறியுள்ளார்.
இதனால் கடும் மன உளைச்சலுக்கு ஆளான வெங்கடேசன் தனது குடும்பத்துடன் பெருமாள் சாமி வீட்டுக்கு சென்று பணத்தை திருப்பி கேட்ட போது அவர் காவல்துறையை வரவைத்து வீட்டுக்குள் இருந்த அனைவரையும் வெளியேற்றியுள்ளார். இதில் சத்யபாமாவின் தாயாருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டுபெரியகுளம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அதனைத்தொடர்ந்து, சத்யபாமா தனது குழந்தைகளுடன் சேர்ந்து பெருமாள் சாமியின் வீட்டின் முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த நேரத்தில், இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர்.. போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். தொடர்ந்து, இந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததை அடுத்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
மோசடி செய்த ராணுவ வீரர் வீட்டின் முன்பு பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் பணத்தை திருப்பி கேட்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.