தமிழகத்தில் தடை செய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட போதை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து செங்குன்றத்தில் சட்ட விரோதமாக செயல்பட்டு வந்த குட்கா குடோனில் அதிரடி சோதனை நடத்தப்பட்டது. அப்போது ரூ.250 கோடிக்கு மேல் வரி ஏய்ப்பு செய்யப்பட்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
அதில் பல்வேறு முக்கிய ஆவணங்கள் சிக்கின. குட்கா ஊழல் தொடர்பான ஆவணங்களும் கைப்பற்றப்பட்டது. இதன் தொடர்ச்சியாக குட்கா அதிபர் மாதவராவ், அவரது பங்குதாரர்களான சீனிவாசராவ், உமாசங்கர் குப்தா, உணவு பாதுகாப்பு அதிகாரி செந்தில்முருகன், கலால் துறை அதிகாரி பாண்டியன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இவர்களை போலீஸ் காவலில் எடுத்து சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள். கடந்த 10-ந்தேதி காலை 11 மணி அளவில் 5 பேரும் ஐகோர்ட்டில் உள்ள சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்தில் இருந்து அழைத்து செல்லப்பட்டனர்.
நுங்கம்பாக்கத்தில் உள்ள சி.பி.ஐ. அலுவலகத்தில் வைத்து அவர்களிடம் குட்கா ஊழல் தொடர்பாக பல்வேறு கேள்விகளை கேட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.இந்த நிலையில் சி.பி.ஐ. காவலில் உள்ள மாதவராவை இன்று காலை 11.30 மணி அளவில் நுங்கம்பாக்கம் சி.பி.ஐ. அலுவலகத்தில் இருந்து அதிகாரிகள் வெளியில் அழைத்து வந்தனர். பின்னர் பலத்த பாதுகாப்புடன் அவரை காரில் ஏற்றி செங்குன்றத்தில் உள்ள குட்கா குடோனுக்கு அழைத்து சென்றனர்.
குட்கா ஊழலில் பணம் கைமாறியது குறித்து அங்கு வைத்தும் அவரிடம் விசாரணை நடைபெற்றது. தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் எங்கிருந்து எல்லாம் செங்குன்றம் குடோனுக்கு கொண்டு வரப்பட்டது என்பது பற்றியும் விசாரணை நடத்தப்பட்ட்டுவருகிறது.