Skip to main content

எடப்பாடி கொண்டு வந்த தீர்மானம் எல்லாம்... செல்லாது! செல்லாது! டிடிவி ஆதரவு எம்.எல்.ஏ பேட்டி

Published on 29/08/2017 | Edited on 29/08/2017
எடப்பாடி கொண்டு வந்த தீர்மானம் எல்லாம்... செல்லாது! செல்லாது! டிடிவி ஆதரவு எம்.எல்.ஏவின் பகீர் பேட்டி!

ஓ.பி.எஸ், இ.பி.எஸ். அணிகளின் இணைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 19 பேர் தொடர்ந்து இ.பி.எஸ். முதல்வராக தொடர எங்களுக்கு விருப்பம் இல்லை என அதனால் எங்களுடைய ஆதரவை வாபஸ் வாங்கிக் கொள்கிறோம் என கவர்னரிடம் தனித்தனியாக மனு கொடுத்துவிட்டு பாண்டிச் சேரியில் உள்ள சொகுசு விடுதியில் தங்கி ஓய்வெடுத்து வருகிறார்கள்.

இதனால் டென்சன் அடைந்த அரசு தலைமை கொறடா ராஜேந்திரன் அந்த 19 பேரை தகுதி நீக்கம் செய்யும்படி சபாநாயகருக்கு பரிந்துரை செய்துள்ளார். இந்த நிலையில் தான் இரண்டு அணிகளும் இணைப்பிற்கு பின் முதன் முறையாக அ.தி.மு.க. தலைமை கழகத்தின் முக்கிய நிர்வாகிகள் எம்.பி., எம்.எல்.ஏ.க்களின் ஆலோசனை கூட்டம் ஓ.பி.எஸ், இ.பி.எஸ். தலைமையில் நடந்ததின் மூலம் சசிகலா, டிடிவியை கட்சியிலிருந்து முழுமையாக நீக்குவது என நான்கு முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டதின் மூலம் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

இதுபற்றி பாண்டிச்சேரியில் சொகுசு விடுதியில் தங்கியுள்ள டிடிவியின் தீவிர ஆதரவாளரான ஆண்டிப்பட்டி சட்டமன்ற உறுப்பினர் தங்கத்தமிழ்ச்செல்வனிடம் ஒரு மினி பேட்டியை தொடர்ந்தோம்.

நக்கீரன்: வருகிற 12ம் தேதி பொதுக்குழு செயற்குழு கூட்டத்தை கூட்ட ஓ.பி.எஸ். இ.பி.எஸ். தலைமையில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் முடிவெடுத்திருக்கிறார்களே?


தங்கத்தமிழ்ச்செல்வன்: எங்கள் கட்சியின் விதிமுறைப்படி பொதுக்குழுவை பொதுச் செயலாளர் சின்னம்மா தான் கூட்ட முடியும் அதுதான் விதிமுறை அதை மீறி பொதுக்குழுவை கூட்டினால் நாளில் ஒரு பங்கு மெஜாரிட்டி இருக்க வேண்டும். அப்படியே இருந்தாலும் அதை பொதுச் செயலாளர் சின்னம்மாவிடம் காட்டி ஒப்புதல் பெற்று பொதுக்குழுவிற்கு கொண்டு வர வேண்டுமே தவிர இவுங்க இஷ்டத்திற்கு பொதுக்குழு, செயற்குழு கூட்டத்தை கூட்ட முடியாது. அப்படியே கூட்டினாலும் அது செல்லவே செல்லாது மக்களையும், கட்சிக்காரர்களையும் ஏமாற்றுவதற்காக ஓ.பி.எஸ்.-ம், இ.பி.எஸ்.-ம் சேர்ந்து நாடகமாடி வருகிறார்கள்.

நக்கீரன்: நமது எம்.எஜி.ஆர். நாளிதழ் மற்றும் ஜெயாடிவியை கட்சியை நடத்துவதற்காக கையகப்படுத்தப்படும் என தீர்மானம் நிறைவேற்றியுள்ளனரே?

தங்கத்தமிழ்ச்செல்வன் : எனது சொந்தமான வீடு என்.டி.பட்டியில் இருக்கிறது. அதை எப்படி டக்சிக்கு எடுக்க முடியும். அதுபோல் தான் நமது எம்.ஜி.ஆரும், ஜெயாடிவியும் சின்னம்மா பெயரில் இருக்கிறது. அது தனிநபர் சொத்து. அதை கட்சிக்காக கையகப்படுத்துவேன் என்று சொல்வது முட்டாள்தனமாகவும், வேடிக்கையாகவும் இருக்கிறது. மக்களை ஏமாற்றுவதற்காக இப்படியெல்லாம் பொய் சொல்லி வருகிறார்கள்.

நக்கீரன் : சசிகலாவையும், தினகரனையும் கட்சியிலிருந்து ஒதுக்கி வைத்ததாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டு இருக்கிறது?


தங்கத்தமிழ்ச்செல்வன் : பொதுச் செயலாளர் சின்னம்மாவையும், துணைப் பொதுச் செயலாளரையும் அண்ணன் டிடிவியையும் ஒதுக்கி வைக்க யாருக்கும் அதிகாரம் இல்லை. அவர்களை ஒதுக்குவதற்காக முன்மொழிந்துள்ள மனோஜ்பாண்டி, சி.வி.சண்முகம் எல்லாம் யார்? சின்னம்மாவால் பதவி கொடுக்கப்பட்டவர். இதெல்லாம் வெறும் கண்துடைப்பு வேலை.

நக்கீரன்: டிடிவி தினகரனால் நியமிக்கப்பட்ட நியமன பதவி செல்லாது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டு இருக்கிறதே?


தங்கத்தமிழ்ச்செல்வன்: பொதுச் செயலாளர் சின்னம்மாவின் உத்தரவின் பேரில் தான் துணைப் பொதுச் செயலாளர் அண்ணன் டிடிவி மாவட்டம் தோறும் கட்சிப் பொறுப்பாளர்களை புதிதாக நியமித்து இருக்கிறார். அது செல்லாது என சொல்ல யாருக்கும் அதிகாரம் கிடையாது. கோர்ட்டுக்கே போனாலும் எங்களுக்கு சாதகமாகத்தான் தீர்ப்பு வரும். முடிந்தால் கோர்ட்டுக்கு போக சொல்லுங்கள் பார்க்கலாம். ஏற்கனவே சின்னம்மாவால் பதவி கொடுக்கப்பட்டுள்ள அவைத்தலைவர் செங்கோட்டையன், பொருளாளர் சீனிவாசன் எல்லாம் செயல்பட்டு கொண்டு தான் இருக்கிறார்கள். அதை செல்லாது என அறிவிக்க வேண்டியதுதானே. அப்ப சின்னம்மா போட்ட பதவி மட்டும் செல்லும், டிடிவி போட்ட பதவி மட்டும் செல்லாதா? இது என்ன நியாயம்?

நக்கீரன் : 19 எம்.எல்.ஏ.க்களை பதவி நீக்கம் செய்யும்படி சபாநாயகருக்கு அரசு தலைமை கொறடா ராஜேந்திரன் பரிந்துரை செய்துள்ளாரே?


தங்கத்தமிழ்ச்செல்வன்: சட்டமன்றத்தில் பேசுவதற்குத்தான் கொறடாவுக்கு பவர் இருக்கிறதே தவிர வெளியே பேச எல்லாம் பவர் கிடையாது. கடந்த ஆறு மாதத்திற்கு முன்பு ஓ.பி.எஸ். 12 எம்.எல்.ஏ.க்களை வைத்துக் கொண்டு நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வரும் போது அரசுக்கு எதிராக செயல்பட்டாரே அப்ப எங்க போனார் இந்த கொறடா. என்ன நடவடிக்கை எடுத்தார் அதை எல்லாம் விட்டுட்டு இப்ப எங்களை மிரட்டி பார்ப்பதற்காக சபாநாயகருக்கு கடிதம் எழுதி இருக்கிறார்கள். அதெற்கெல்லாம் பயப்பட மாட்டோம்.

நக்கீரன் : சபாயாகரும் கூட உங்களுக்கு கட்சிதாவல் தடை சட்டத்தில் நடவடிக்கை எடுக்க போவதாக நோட்டீஸ் அனுப்பி இருக்கிறாராமே?


தங்கத்தமிழ்ச்செல்வன்: ஆமாம் நோட்டீஸ் அனுப்பி இருக்கிறார். யார் கட்சி தாவுனாங்கன்னு அவர் பார்த்தாரா? நாங்க எல்லாம் அ.தி.மு.க.வில் தானே இருக்கிறோம். கட்சி ஒன்றும் தாவவில்லை. சபாநாயகரும் எங்களை மிரட்டி பணிய வைக்க பார்க்கிறார். அது ஒருபோதும் நடக்காது. எங்களை அழைத்து முறைப்படி பேச வேண்டும். அதுபோல் சின்னம்மா பொதுச் செயலாளராகவும், டிடிவி துணைப் பொதுச் செயலாளராகவும் தொடர்ந்து நீடிக்க வேண்டும் இல்லையென்றால் இந்த ஆட்சி நீடிப்பது கஷ்டம்!

- சக்தி

சார்ந்த செய்திகள்