மீன் விற்று வரும் பெண்மணியை பேருந்தில் ஏறவிடாமல் நடத்துநர் தடுத்த சம்பவம் கன்னியாகுமரியில் நிகழ்ந்துள்ளது. இது தொடர்பாகப் பேருந்து நிலையத்திலேயே அந்த பெண்மணி நியாயம் கேட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் தொடர்பான வீடியோ காட்சிகள் சமூகவலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
குமரி மாவட்டத்தின் குளைச்சல் பகுதியில் உள்ள வாணியக்குடி எனும் மீனவ கிராமத்தைச் சேர்ந்த செல்வம் என்ற மூதாட்டி குளைச்சல் பகுதியில் மீன் விற்பனை செய்துவிட்டு தினமும் பேருந்தில் வீடு செல்வது வழக்கம். தலைச்சுமையாக மீன்களை விற்றுவிட்டு மாலை வேளையில் அரசு பேருந்தில் பயணித்துவந்த மூதாட்டி செல்வம் மீன் விற்பனை முடிந்து பேருந்தில் ஏறிய நிலையில் பேருந்து நடத்துநர், மீன் விற்றதால் நாற்றம் வருகிறது எனக்கூறி பேருந்திலிருந்து மூதாட்டி செல்வதை இறக்கிவிட்டுள்ளார்.
என்ன செய்வதென்று தெரியாமல் தவித்த மூதாட்டி பேருந்து நிலையத்தில் உள்ள நேர காப்பாளர் அலுவலகத்திற்குச் சென்று தனது ஆற்றாமையைக் கொட்டி தீர்த்துள்ளார். எத்தனை முறை இதுபோல் கீழே இறக்கிவிட்டு நடந்தே போயிருக்கேன்... இதெல்லாம் ஒரு நியாயமா நீதியா எனக் கண்ணீர் விட்டார். இந்த வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவரது ஃபேஸ்புக் பக்கத்தில், ''குமரி மாவட்டத்தில், மீன் விற்பனை செய்து வந்த தாய் ஒருவரைப் பேருந்து நடத்துநர் இறக்கிவிட்டதாகக் கூறப்படும் நிகழ்வானது என்னை அதிர்ச்சி அடைய வைத்தது. மகளிர் மேம்பாட்டுக்காகக் கட்டணமில்லா உரிமைச்சீட்டை வழங்கி, அதை நடத்துநர்கள் திறம்படச் செயல்படுத்தி வரும் இக்காலத்தில், ஒரு நடத்துநரின் இச்செயல் கண்டிக்கத்தக்கதாக உள்ளது. எல்லோரும் சமம் என்ற பரந்த உள்ளத்துடன் நம் அனைவரது எண்ணமும் செயலும் அமைய வேண்டும்'' எனத் தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பாக அரசு பேருந்து ஓட்டுநர் மைக்கேல், நடத்துனர் மணிகண்டன், நேரக்காப்பாளர் ஜெயக்குமார் ஆகியோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.