காஞ்சிபுரத்தில் நடைபெற்ற தேமுதிக கட்சி பொதுக்கூட்டத்தில் விஜயகாந்த்தின் மகன் விஜய பிரபாகரன் கலந்துகொண்டு உரையாற்றினார். அப்பொழுது அவர் பேசுகையில், ''நான் அண்மையில் மும்பைக்கு சென்றிருந்தேன், அப்பொழுது எனக்கு கார் ஓட்டிய டிரைவர் ஏதோ முதல் முறை நான் மும்பைக்கு வருவது போல நினைத்துக்கொண்டு 'நான் நடிகர்களுக்கு வண்டி ஓட்டி இருக்கிறேன். பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பல நடிகர்களுக்கு வண்டி ஓட்டி உள்ளேன்' என சொல்லிக் கொண்டே வந்தார். ஆனால் நான் என்னைப் பற்றி அவரிடம் எதுவுமே சொல்லவில்லை. 'ஒரே ஒரு நடிகருக்கு மட்டும் வண்டி ஓட்டினேன் அவர் மட்டும் 2000 ரூபாய் பணம் கொடுத்து சாப்பாடு வாங்கி கொடுத்தார். அவர் பார்ப்பதற்கு உங்களை மாதிரியே இருந்தார். நீங்க தானா அது' என ஆங்கிலம் கலந்து இந்தியில் கேட்டார். நான், 'யார்; அவருடைய பெயர் என்ன' என்று கேட்டேன்.
அவர் காந்த் என்று சொன்னார். 'ரஜினிகாந்தா' என்று கேட்டேன். அதற்கு ரஜினிகாந்த் இல்லை. என்றார். 'விஜயகாந்தா' என்றேன். ஆமாம் என்றார். 'அச்சா ஹியூமன் ஹே. 2000 ரூபாய் பணம் கொடுத்துவிட்டு சாப்பிட்டுப் போக சொன்னார் என்று அவர் சொன்னார். நான் எல்லாத்தையும் கேட்டுவிட்டு எனக்கு தெரிந்த இந்தியில் 'ஹமாரா விஜயகாந்த் பேட்டா' என்றேன். உடனே வண்டியை நிறுத்திவிட்டார். 'சார் விஜயகாந்த் உடைய பையனா என்று ஆச்சரியப்பட்ட அவர், அவரைப் புகழ்ந்து கொண்டே இருந்தார். தமிழ்நாட்டிலிருந்து வடநாட்டுக்கு போனால் இந்த மரியாதையை சம்பாதிப்பவர்களால் மட்டும்தான் இங்கிருக்கும் மக்களை வழி நடத்த முடியும். இதை நான் ஒரு எடுத்துக்காட்டாக சொல்கிறேன்.
ஓட்டு போடும்போது எல்லாருமே வேணும். காசு கொடுக்கும்போது கால்வாசி வேணுமா? இது எந்த விதத்தில் நியாயம். மக்களே நீங்கள் இதை சிந்திக்க வேண்டும். விஜயகாந்துடைய சின்ன பையன் பேசிவிட்டு போய் விடுவான் என்று தவறாக கணக்குப் போட்டு விடாதீர்கள். விஜயகாந்த் இருக்கும் பொழுது அது பெரிய கட்சி. இப்போ அவருக்கு உடல் சரியில்லை. அவ்வளவு தான் இந்த கட்சி என விமர்சனம் செய்தவர்களுக்கும் நான் சொல்லிக் கொள்கிறேன். தேமுதிக இன்றல்ல இன்னும் 100 இன்னும் 500 வருடங்கள் ஆனாலும் அவரால் உருவாக்கப்பட்ட தேமுதிக நிற்கும்'' என்றார்.