Skip to main content

'நாய் கூட இப்போ பி.ஏ பட்டம் வாங்குது; இந்த வளர்ச்சி திமுக போட்ட பிச்சை' - ஆர்.எஸ்.பாரதி சர்ச்சை பேச்சு

Published on 03/07/2024 | Edited on 03/07/2024
'Even a dog is getting a BA degree now; This development was disputed by DMK's begging'-RS Bharati speech


நீட் தேர்வில் முறைகேடுகள் நடந்திருக்கும் நிலையில் நீட்டை ரத்து செய்ய வலியுறுத்தி திமுகவின் மாணவர் அணி சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

போராட்ட மேடையில் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பேசுகையில், ''கம்யூனில் ஜீவோ மூலம் தான் இங்கு நம்மில் பல பேர் டாக்டர்கள். பல பேர் இதை மறந்து விட்டார்கள். ஏதோ குலப்பெருமையால், கோத்திர பெருமையால் டாக்டர் ஆகிவிட்டது போல பேசுகிறார்கள். நான் வெளிப்படையாக பேசுகிறேன். நான் எதைப் பற்றியும் கவலைப்படுவதே கிடையாது. மனசுக்கு பட்டதை வெளிப்படையாக பேசக்கூடிய தைரியம் உள்ளவன் நான். இதை நாம் நினைக்க வேண்டும். நான் ஒரு வக்கீல் என்றால் இது என்ன குல பொறுமையால் கோத்திர பெருமையால் வந்ததா? இந்த இயக்கம் போட்டப் பிச்சை. அதை வெளிப்படையாகவே சொல்கிறேன். நான் பி.ஏ பட்டம் பெற்றவுடனே ஒரு பெயிண்டர் ஆள்கிட்ட கொடுத்து ஆர்.எஸ்.பாரதி பி.ஏ என பேர் எழுதி மாட்டினேன். அப்போதெல்லாம் அப்படித்தான் மாட்டுவார்கள். ஊரில் ஒரே பி.ஏதான் இருந்தேன். இப்பொழுது நாய் கூட பி.ஏ பட்டம் வாங்குகிறது. இப்பொழுது யார் வீட்டிலாவது பி.இ என போர்டு தொங்குகிறதா? யார் வீட்டிலாவது பி.ஏ என்று போட்டு தொங்குகிறதா? யார் இந்த வளர்ச்சிக்கு காரணம். அதை அழிக்க நினைப்பதற்கு தான் இந்த நீட் தேர்வு வந்திருக்கிறது''என்றார். ஆர்.எஸ்.பாரதியின் இந்த பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அவர் பேசுகையில், ''தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட இந்த தீர்மானத்திற்கு வெற்றி கிடைக்கின்ற ஒரு சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இது அகில இந்திய பேசுபொருளாக மாறி இருக்கிறது. பாராளுமன்றத்தில் இது குறித்து விவாதிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மற்றும் எங்களுடைய திமுகவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கேள்வி எழுப்பிய நேரத்தில் இன்று ஜூலை மூன்றாம் தேதி நீட் விவகாரத்தை விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளலாம் எனச் சபாநாயகர் உறுதி அளித்ததாகச் சொன்னார்கள்.

ஆனால் நேற்றைய தினமே பாராளுமன்றத்தினை முடித்துக் கொண்டு விட்டுப் போய்விட்டார்கள் என்றால் இதற்கெல்லாம் பதில் சொல்ல பயந்து கொண்டுதான் மோடி ஓடி விட்டார் என்று, நிச்சயமாக எங்களைப் போன்றவர்களுக்கு கருதத் தோன்றுகிறது. உச்சநீதிமன்றம் நீட் தொடர்பான மோசடி, ஊழல் எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டிருக்கிறது. நல்ல முடிவுகள் வரும் என்று எதிர்பார்க்கிறோம். திமுக எடுத்த முடிவு நல்ல முடிவு என்பதை அனைவரும் இன்று உணர ஆரம்பித்து விட்டார்கள். ஒரு காலத்தில் தமிழ்நாட்டில் திமுக மட்டும் பேசிக்கொண்டு இருந்தது. இப்போது தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய அனைத்து கட்சிகளும் பேச ஆரம்பித்து விட்டது. ஏன் இன்று காலையில் நடிகர் விஜய் கூட தாமாக முன்வந்து தமிழக அரசின் தீர்மானத்தை முழுமனதாக ஆதரிப்பதாக சொல்லி இருக்கிறார். ஒட்டுமொத்த தமிழர்களும் இதை ஆதரிக்கக் கூடிய நிலை ஏற்பட்டுள்ளது. அகில இந்திய அளவில் இது பேசு பொருளாகி இருப்பதால் நீட் விவகாரத்தில் நல்ல முடிவு வரும்'' என்றார்.

படம்:எஸ்.பி.சுந்தர்

சார்ந்த செய்திகள்