அதிமுக முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் அறையில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்எல்ஏ விடுதியில் அதிமுக முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் அறையில் அமலாக்கத்துறை அதிகாரிகள் ஆறு பேர் சோதனையில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது. எம்எல்ஏ விடுதி நிர்வாகத்திடம் வைத்திலிங்கம் தங்கியிருந்த அறையின் சாவியை வாங்கி திறந்து அவருடைய அறை சோதனைக்கு உள்ளாக்கப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது. அதேநேரம் வைத்திலிங்கம் தொடர்பான மற்ற இடங்களிலும் சோதனை நீட்டிப்பதற்கான வாய்ப்புகள் இருப்பதாகக் கூறப்படுகிறது.
2011 ஆம் ஆண்டு முதல் 2016 ஆம் ஆண்டு வரை அதிமுக ஆட்சிக் காலத்தில் தமிழக வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சராக இருந்த வைத்திலிங்கம் தற்பொழுது ஒ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளராக இருந்து வருகிறார். தற்போது ஒரத்தநாடு தொகுதி சட்டமன்ற உறுப்பினராக உள்ள வைத்திலிங்கம் அமைச்சராக இருந்த பொழுது பெருங்களத்தூரில் ஸ்ரீராம் குழுமத்திற்கு சொந்தமான 'ஸ்ரீராம் ப்ராப்பர்ட்டீஸ் அண்ட் இன்ஃப்ரா ஸ்ட்ரக்சர்' என்ற நிறுவனம் 57 ஏக்கர் நிலத்தில் 24 பிளாட்டுகளாக 1400 க்கும் மேற்பட்ட வீடுகள் கொண்ட குடியிருப்புகள் கட்டுவதற்கு திட்டமிட்டார்கள். அப்பொழுது சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தில் கடந்த 2013 ஆம் ஆண்டு விண்ணப்பித்து இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக அனுமதி வழங்காத நிலையில், வைத்திலிங்கம் பணம் பெற்றுக் கொண்டு அனுமதி வழங்கினார் என்ற குற்றச்சாட்டு இருந்தது.
அந்த குற்றச்சாட்டு அடிப்படையில் லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு பதிவு செய்திருந்தது. அந்த வழக்கை அமலாக்கத்துறை கையில் எடுத்திருக்க வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. லஞ்ச ஒழிப்புத்துறை பதிவு செய்யும் வழக்குகளில் உள்ள விவரங்களை வைத்து அமலாக்கத்துறை தாமாக முன்வந்து வழக்குகளை பதிவு செய்யும். அதில் சட்டவிரோத பணப் பரிமாற்றம் நடந்திருக்கிறதா அல்லது வெளிநாட்டில் பணப் பரிவர்த்தனை செய்யப்பட்டு இருக்கிறதா என்ற முகாந்திரத்தின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்வார்கள். அப்படி அதனடிப்படையில் இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டு இருக்கலாம் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது.