ஈரோடு மாவட்டம் ஊஞ்சலூர் அருகே உள்ள ஆராம்பாளையம் வாய்க்கால்மேடு பகுதியைச் சேர்ந்தவர் இளங்கோ. இவருடைய மகள் 27 வயது மாலினிஸ்ரீ. இவர் பி.டெக். ஐ.டி. முடித்துவிட்டு பெங்களூரில் உள்ள ஒரு நிறுவனத்தில் சாப்ட்வேர் என்ஜினீயராக கடந்த நான்கு ஆண்டுகளாக வேலை செய்து வந்துள்ளார். சென்ற ஓரிரு மாதங்களாக அவரது ஆராம்பாளையம் வீட்டில் இருந்தபடியே வேலை பார்த்து வந்தார்.
இந்த நிலையில், மாலினிஸ்ரீக்கு பெற்றோர் திருமணம் செய்ய வரன் பார்த்து வந்தனர். ஆனால், ஜோதிட காரணத்தால் சரியான வரன்கள் அமையாமல் இருந்துள்ளது. திருமணத்திற்காக பெற்றோர் சிரமப்படுவதை எண்ணி மாலினிஸ்ரீ மனம் உடைந்த நிலையில் காணப்பட்டு வந்தார். இந்த விரக்தியில் கடந்த டிசம்பர் 21-ந் தேதி விஷம் சாப்பிட்டுள்ளார். இதுகுறித்து வீட்டில் யாரிடமும் அவர் தெரிவிக்காமல் இருந்துள்ளார். இந்நிலையில், கடந்த 25 ஆம் தேதி மாலினிஸ்ரீக்கு கடுமையான வயிற்று வலி ஏற்பட்டு உள்ளது. அதன் பின்னர் தான் அவர் விஷம் சாப்பிட்ட தகவல் பெற்றோருக்கு தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள் மாலினிஸ்ரீயை ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர்.
இந்நிலையில், அவரது உடல்நிலை மிகவும் மோசமானதால் மேல் சிகிச்சைக்காக அவரை ஈரோடு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த மாலினிஸ்ரீ சிகிச்சை பலனின்றி பரிதாபமாக 5 ஆம் தேதி இறந்தார். இதுகுறித்து கொடுமுடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். ஜாதக பலன் சரியில்லை, திருமணத் தடை என்ற காரணத்திற்காக பெண் சாப்ட்வேர் என்ஜினீயர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.