சேலம் மாவட்டம், பனமரத்துப்பட்டியைச் சேர்ந்தவர் ரமேஷ். இவரது மனைவி 30 வயதான ரேகா. இவர்களுக்கு 3 வயதில் ஒரு மகனும், ஒன்றரை வயதில் ஒரு மகனும் என இரண்டு குழந்தைகள் உள்ளனர். ரேகாவின் பெற்றோர்கள் ஈரோடு ஏ.பி.டி. ரோடு பகுதியில் வசித்து வருகிறார்கள்.
இந்த நிலையில் நேற்று ரேகா தனது குழந்தைகளுடன் ஒரிரு நாட்களுக்கு முன்னர் பெற்றோர் வீட்டிற்கு வந்துள்ளார். வீட்டில் ரேகாவின் தாயார் தமிழரசி மற்றும் தம்பி மணி ஆகியோர் இருந்துள்ளனர். இன்று (25.01.2021) காலை ரேகா உறவினர் ஒருவரது வீட்டு கிரஹப் பிரவேசத்திற்குச் சென்றுவிட்டு வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது இவரது தாயார் தமிழரசி, பேரன்களுடன் வெளியே சென்றுவிட்டார்.
வீட்டில் ரேகா மட்டும் தனியாக இருந்துள்ளார். அப்போது சுமார் 30 வயது மதிக்கத்தக்க ஒரு வாலிபர் ரேகாவின் வீடு எங்கு உள்ளது என அப்பகுதியினரிடம் கேட்டுள்ளார். அக்குடும்பத்திற்குத் தெரிந்தவர் தான் என நினைத்த அப்பகுதியினர் வீட்டை அடையாளம் காட்டியுள்ளனர். அந்த வீட்டுக்குச் சென்ற அந்த இளைஞர் சிறிது நேரத்தில் ரேகா வீட்டிலிருந்து ரத்தக்கறையுடன் வெளியேறியிருக்கிறார். அதைக் கண்ட அக்கம்பக்கத்தினர் ரேகா வீட்டுக்குச் சென்று பார்த்தபோது அங்கு ரேகா அரிவாளால் கொடூரமாக வெட்டப்பட்டு ரத்த வெள்ளத்தில் இறந்துகிடந்தது தெரியவந்தது.
இதுகுறித்து ஈரோடு வீரப்பன்சத்திரம் போலீசாருக்குத் தகவல் கொடுக்கப்பட்டதையடுத்து உடனடியாக ஈரோடு எஸ்.பி. தங்கதுரை, ஏ.டி.எஸ்.பி. பொன் கார்த்திக்குமார், டி.எஸ்.பி. ராஜு ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டனர். மேலும் மோப்ப நாய் வீரா வரவழைக்கப்பட்டது.
இந்தச் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த வீரப்பன்சத்திரம் காவல்துறையினர் சடலத்தைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக ஈரோடு அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், கொலையாளி வந்து சென்றது தொடர்பாக அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து வருவதோடு கொலைக்கான காரணம் குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பட்டப்பகலில் ஈரோட்டில் வீடு புகுந்து இளம்பெண் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் ஈரோட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.