Skip to main content

பள்ளிகள் திறப்பு; ஜவுளி சந்தையில் சீருடைகள் விற்பனை அமோகம்

Published on 23/05/2023 | Edited on 23/05/2023

 

erode textile market school uniform sales 
கோப்பு படம்

 

ஈரோடு பன்னீர்செல்வம் பார்க் அருகே ஈரோடு ஜவுளி சந்தை (கனி மார்க்கெட்) செயல்பட்டு வருகிறது. இங்கு தினசரி கடைகள், வாரக் கடைகள் செயல்பட்டு வருகின்றன. குறிப்பாக ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமை மாலை முதல் செவ்வாய்க்கிழமை மாலை வரை ஜவுளி சந்தை நடைபெற்று வருகிறது. இந்த ஜவுளி சந்தை உலகப் புகழ்பெற்றது.

 

இதில் மகராஷ்டிரா, ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானா போன்ற வெளி மாநிலங்களில் இருந்தும், தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வியாபாரிகள் வந்து மொத்த விலையில் துணிகளை கொள்முதல் செய்து செல்வார்கள். மற்ற இடங்களை காட்டிலும் இங்கு விலை குறைவாக இருப்பதால் இங்கு எப்போது மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும். சாதாரண நாட்களை விட பண்டிகை காலங்களில் கூட்டம் அலைமோதும். கோடிக்கணக்கில் வர்த்தகம் நடைபெற்று வருகிறது. நேற்று மாலை முதல் வழக்கம் போல் ஜவுளி வாரச்சந்தை கூடியது. சென்ட்ரல் தியேட்டர் அருகே உள்ள வளாகத்திலும் வாரச்சந்தை கூடியது. ஆந்திரா, கர்நாடகா போன்ற மாநிலங்களில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட வியாபாரிகள் வந்திருந்தனர். கேரளாவில் இருந்து குறைந்த அளவிலும், தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து அதிக அளவில் வியாபாரிகள் வந்திருந்தனர். தற்போது கோடை விடுமுறை முடிய இன்னும் 10 நாட்களே இருப்பதால் பள்ளி சீருடைகள் விற்பனை சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.

 

கடந்த வாரத்திலிருந்து பள்ளி சீருடையை வியாபாரிகள் ஆர்வத்துடன் வாங்கிச் சென்றனர். இதே போல் இந்த வாரமும் பள்ளி சீருடை வியாபாரம் சூடுபிடிக்கத் தொடங்கியது. வெளிமாநில வியாபாரிகள் பள்ளி சீருடைகளை மொத்தமாக வாங்கிச் சென்றனர். இதனால் இன்று மொத்த வியாபாரம் 40 சதவீதம் நடைபெற்றது. இதைப்போல் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் நூற்றுக்கணக்கான வியாபாரிகள் வந்திருந்தனர். இதனால் இன்று சில்லறை விற்பனையும் 35 சதவீதம் நடைபெற்றது. கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் வியாபாரிகள் வந்திருந்தனர். இதனால் வியாபாரம் அமோகமாக நடைபெற்றது. 

 

 

சார்ந்த செய்திகள்