ஈரோடு மாநகரில் ஜவுளி சந்தையானது பன்னீர்செல்வம் பார்க், திருவேங்கடசாமி வீதி, ஈஸ்வரன் கோவில் வீதி ஆகிய பகுதிகளில் வாரந்தோறும் திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமை கூடும். இது தவிர இதர நாட்களில் தினசரி சந்தையும் நடக்கிறது. வாரந்தோறும் நடக்கும் ஜவுளி சந்தைக்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்தும், கேரளா, கர்நாடகா, ஆந்திரா, குஜராத், மகாராஷ்டிரா போன்ற வெளிமாநிலங்களில் இருந்தும் வியாபாரிகள் நேரடியாக வந்து ஜவுளிகளை மொத்த விலையில் கொள்முதல் செய்வார்கள்.
இந்நிலையில், தமிழ் மாதம் ஆடி 18 ஆம் தேதியை ஆடிப்பெருக்காகத் தமிழக மக்கள் கொண்டாடுவது வழக்கம். நடப்பாண்டு ஆடிப்பெருக்கு வருகிற ஆகஸ்ட் மாதம் 3 ஆம் தேதி(வியாழன்) கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு இந்த வாரம் கூடிய ஜவுளி சந்தைக்குத் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா போன்ற வெளிமாநிலங்களில் இருந்தும் வியாபாரிகள் வந்து ஜவுளிகளைக் கொள்முதல் செய்து சென்றனர். இதேபோல், ஈரோடு மற்றும் சுற்றுப்புறப் பகுதியைச் சேர்ந்த மக்கள் சில்லறை விலையில் ஜவுளி ரகங்களை ஆர்வமுடன் வாங்கிச் சென்றனர். இதனால், இந்த வாரம் சில்லறை மற்றும் மொத்த வியாபாரம் விறுவிறுப்பாக நடைபெற்றது.
இன்று ஆந்திரா, கர்நாடகா , தெலுங்கானா போன்ற வெளிமாநிலங்களில் இருந்து வியாபாரிகள் அதிக அளவில் வந்திருந்தனர். காட்டன் சுடிதார், காட்டன் வேட்டி, சட்டைகள் சிறுவருக்கான காட்டன் சட்டைகள், பனியன் ஜட்டிகள் விற்பனை அமோகமாக இருந்தது. வெளி மாநிலங்களிலிருந்தும் ஆர்டர் அதிக அளவில் வந்திருந்தது. இதுபோல் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதியிலிருந்தும் நூற்றுக்கும் மேற்பட்ட உள்ளூர் வியாபாரிகள் வந்திருந்தனர். இன்று சில்லறை விற்பனை 50 சதவீதம் நடைபெற்றது. இதேபோல் மொத்த வியாபாரம் 40 சதவீதம் வரை நடைபெற்றது. குறிப்பிட்ட ரகங்களுக்கு ஆடித் தள்ளுபடியில் விலை மலிவாகக் கிடைத்ததால் வியாபாரிகள் போட்டிப் போட்டு வாங்கிச் சென்றனர்.