ஈரோடு, கருங்கல்பாளையம் ஜெயகோபால் வீதியில் டாஸ்மாக் கடை செயல்பட்டுவருகிறது. குடியிருப்புப் பகுதியில் இந்த டாஸ்மாக் கடை இருப்பதால், அப்பகுதி மக்கள் தொடர்ந்து இந்த டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்பு தெரிவித்துவந்தனர். இக்கடையை அகற்றக் கோரி பல்வேறு கட்டப் போராட்டங்களில் ஈடுபட்டனர். ஆனால், தொடர்ந்து டாஸ்மாக் கடை இயங்கியேவந்தது.
இந்த நிலையில், கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு செந்தில்குமார் என்ற தொழிலாளியை மற்றொரு தொழிலாளி சந்திரன் என்பவர் தலையில் கல்லை போட்டுக் கொலை செய்ய முயன்றுள்ளார். இதையடுத்து டாஸ்மாக் கடைக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், இன்று 2ஆம் தேதி இந்த டாஸ்மாக் கடையால் இப்பகுதியில் பல்வேறு குற்றச் சம்பவங்கள் நடைபெறுகிறது என்றும், டாஸ்மாக் கடையை உடனே அகற்ற வேண்டும் என்றும் வலியுறுத்தி, தமிழர் கழகம் கட்சியைச் சேர்ந்த நிர்வாகிகள் சிலர் டாஸ்மாக் கடை அருகே உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் கருங்கல்பாளையம் போலீசார் அந்த இடத்துக்கு வந்தனர்.
இந்த நிலையில், அந்த டாஸ்மாக் கடையில் மது குடிக்க ஐம்பதுக்கும் மேற்பட்ட குடிமகன்கள் காத்துக் கொண்டிருந்தனர். ஆனால், நீண்ட நேரமாகியும் டாஸ்மாக் கடை திறக்காததால், ஆத்திரமடைந்த குடிமகன்கள் டாஸ்மாக் கடை முன்பு அமர்ந்து, டாஸ்மாக் கடையை உடனடியாகத் திறக்க வேண்டும் எனப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், அந்தப் பகுதியில் பரபரப்பான சூழ்நிலை நிலவியது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அங்கு போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர். கடைசியாக, தற்காலிகமாக டாஸ்மாக் கடை திறக்கப்படுகிறது என்றும் விரைவில் வேறு இடத்திற்கு மாற்றப்படும் என்றும் பொதுமக்களைச் சமாதானம் செய்து கடையைத் திறந்தனர்.