"ஈரோடு மாவட்ட காவல்துறை ஏதோ தனி அதிகார வரம்பு உள்ளதுபோல சர்வாதிகார போக்கை தொடர்ந்து கடைபிடிக்கிறது. இங்கு புதிதாய் வந்த மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சக்திகணேசன் மக்கள் சார்ந்து இயங்கும், ஜனநாயகத்தில் நம்பிக்கை உள்ளோரையும் பிரிவினைவாதி போல நடத்துகிறார்" என ஈரோடு போலீசாரை கண்டித்து நம்மிடம் பேசினார் தமிழக தற்சார்பு விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளரான கி.வே.பொன்னையன்.
அவர் மேலும் கூறும்போது "இலங்கையில் நடந்த தொடர் குண்டுவெடிப்பு பயங்கரவாதத்தைக் கண்டிக்கவும், உயிரிழந்தோருக்கு அஞ்சலி செலுத்தவும், உறவுகளுக்கு ஆறுதல் கூறவும் ஈரோட்டில் உள்ள தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழுவின் சார்பில், 25ந் தேதி, வியாழன் மாலை பெரியார் மன்றத்தில் நினைவேந்தல் கூட்டம் நடைபெற்றது. ஆனால், இந்த கூட்டம்
நேற்றே ஈரோடு சி.எஸ்.ஐ. பிரப் சர்ச் முன்பாக நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால், ஈரோடு காவல்துறை தேர்தல் விதியை காரணம் காட்டி இறுதி நேரத்தில் இரங்கல் கூட்டத்திற்கு அனுமதி மறுத்துவிட்டது. தேர்தலே முடிந்துவிட்டது தேர்தல் நடத்தை விதிகளுக்கு, கோயில் திருவிழாக்களும், மரண நிகழ்ச்சிகளும் விதிவிலக்காக இருக்கும்போது, தமிழகத்தின் மற்ற மாவட்டங்களில் இது போன்ற கூட்டங்களுக்கு அனுமதி வழங்கியுள்ள நிலையில், இலங்கையில் அநியாயமாக உயிர் பறிக்கப்பட்ட அப்பாவி மக்களுக்காகவும், குழந்தைகளுக்காகவும் ஈரோட்டில் இரங்கல் தெரிவித்தால், இந்த போலீசுக்கு என்ன இடையூறு. இதில் என்ன சட்ட ஒழுங்கு பிரச்சனை என்று தெரியவில்லை.
சரி, அதையும் ஏற்றுக் கொள்வோம் பொது இடத்தில்தான் அனுமதிக்கவில்லை. ஆனால், திராவிடர் கழக கட்டிடமான பெரியார் மன்றத்துக்குள் நடத்திக் கொள்கிறோம் என்று கேட்டோம். அதற்கும் போலீஸ், ஏகப்பட்ட கெடுபிடிகள் செய்தது ஒரு நாள் நடத்த முடியாமல் பின்பு, நாளைக்கு நடத்துங்கள் என்று சொன்னார்கள். இவ்வளவையும் தாண்டி, இன்றைய நிகழ்ச்சி நடைபெற்றது.
போலீஸ் கெடுபிடிகள் புதிதல்ல; ஏற்கெனவே தேசப்பிதா மகாத்மா காந்தி படுகொலை 70-ஆம் ஆண்டு நிகழ்ச்சியை இதே அரங்கத்துக்குள் நடத்தக்கூடாது என்று தடை விதித்ததும் இந்த ஈரோடு போலீஸ்தான்.
ஈரோடு மாவட்டத்தில் ஜனநாயகம் இருக்கிறதா? இல்லை, போலீஸ் ராஜ்ஜியம் நடக்கிறதா? தமிழ்நாட்டுக்கு ஒரேசட்டம்தான் இருக்கிறதா? இல்லை, ஈரோட்டுக்கு மட்டும் தனிச்சட்டம் இருக்கிறதா? மக்கள் சார்ந்த இயக்கங்கள் மீது ஈரோடு போலீசார் கெடுபிடிகள் தொடர்ந்தால் மக்களை திரட்டி போராடுவதோடு ஈரோடு போலீசின் சர்வாதிகார போக்கை நீதிமன்றம் வரை கொண்டு செல்வோம்" என்றார்.