ஈரோடு மாவட்டத்தில் அனுமதியின்றி மது விற்பனை நடைபெறுகிறதா என்பதை கண்காணிக்கும் வகையில் மாவட்டம் முழுவதும் உள்ள போலீசார் அந்தந்த போலீஸ் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் தீவிர ரோந்து மற்றும் கண்காணிப்பிலும் ஈடுபட்டு வருகின்றனர்.
அதன்படி கோபிசெட்டிபாளையம் சப் இன்ஸ்பெக்டர் கபாலி கண்ணன் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது கோபியை அடுத்த கொளப்பலூர் குளத்துக்கடை குளம் பகுதியில் ஒருவர் சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்தார். அவரைப் பிடித்து சோதனை செய்ததில் அனுமதியின்றி மது விற்பனைக்கு வைத்திருந்தது தெரிய வந்தது. அவரிடமிருந்து 10 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது. விசாரணையில் அவர் அதே பகுதியைச் சேர்ந்த ராஜேந்திரன் (வயது 49). எனவும் தெரிய வந்தது.
இது குறித்து கோபி போலீசார் வழக்குப்பதிவு செய்து ராஜேந்திரனை கைது செய்தனர். இதே போல் ஆசனூர் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் தேவேந்திரன் தலைமையில் போலீசார் சக்தி- மைசூர் ரோடு காரப்பள்ளம் சோதனை சாவடி அருகே வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது கர்நாடகாவில் இருந்து தமிழகம் நோக்கி அரசு பஸ் ஒன்று வந்து கொண்டிருந்தது. அந்த பஸ்ஸை சோதனை செய்த போது அதே பகுதியைச் சேர்ந்த வெங்கடாசலம் (வயது 42) என்பவர் கர்நாடகாவில் இருந்து மது பாட்டில்களை வாங்கி வந்து இங்கு கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதற்காக கொண்டு வந்தது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர் அவரிடம் இருந்து மது பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது.
இதேபோல் தாளவாடி போலீசார் பனஹள்ளி பஸ் நிறுத்தம் அருகே சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது அதே தாளவாடி பகுதியை சேர்ந்த சந்திரகுமார் (வயது 33) என்பவர் போலீசை பார்த்ததும் விற்பனைக்கு கொண்டு வந்திருந்த கர்நாடக மது பாட்டில்களை அங்கே போட்டுவிட்டு தப்பி ஓடிவிட்டார். போலீசார் அந்த மது பாட்டில்களை பறிமுதல் செய்து தப்பி ஓடிய சந்திரகுமாரை தேடி வருகின்றனர்.