
ஈரோடு மாவட்டம், சூரம்பட்டி கஸ்தூரிபாய் வீதியில் உள்ள ஒரு வீட்டின் மேல் மாடியில் விக்னேஷ்(29), அவரது தம்பி அருண்குமார்(25) ஆகியோர் வாடகைக்கு குடியிருந்து வந்தனர். அண்ணன் - தம்பி இருவரும் கூலி வேலை செய்து வந்தனர். விக்னேஷ் - அருண்குமார் இருவரும் அவ்வப்போது ஒன்றாக அமர்ந்து மது அருந்துவது வழக்கம். இருவருக்கும் இன்னும் திருமணம் ஆகவில்லை. மது அருந்தும் போது அவர்களுக்கிடையே சிறு சிறு பிரச்சனைகள் ஏற்படுவது வழக்கமாம்.
அதுபோலவே நேற்று இரவும் வழக்கம்போல் விக்னேஷ், அருண்குமார் மது குடித்துள்ளனர். அப்போது அருண்குமார், தம்பி விக்னேஷிடம் வீட்டு வாடகைக்கு பணம் வேண்டும் என கேட்டுள்ளார். இது தொடர்பாக அவர்களுக்கு இடையே வாய் தகராறு ஏற்பட்டுள்ளது. அது பின்னர் கைகலப்பாக மாறி ஒருவரை ஒருவர் கடுமையாக தாக்கி கொண்டனர். இதில் அருண்குமார் தாக்கியதில் விக்னேஷுக்கு தலை, கண், வயிறு ஆகிய பகுதிகளில் காயம் ஏற்பட்டுள்ளது. பின்னர் அருண்குமார் போதையில் அங்கே படுத்து தூங்கிவிட்டார்.
இந்த நிலையில் இன்று காலை அருண்குமார் நண்பர் அவரது வீட்டுக்கு வந்த போது விக்னேஷ் இறந்து கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். இதை அடுத்து அருண்குமார் போதை தெளிந்து எழுந்து பார்த்த பிறகுதான் குடி போதையில் அண்ணனை கொன்று விட்டோமே என அதிர்ச்சியடைந்துள்ளார்.
இது குறித்து ஈரோடு சூரம்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் கிடைத்ததும் டவுன் டி.எஸ்.பி. ஆனந்தகுமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். போலீசார் விசாரணையில் மேற்கண்ட விவரம் தெரிய வந்தது. இதை அடுத்து விக்னேஷ் உடலை பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அருண்குமாரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தக் கொலை சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.