Skip to main content

புதிய அமர்வில் நடிகர் சங்கத் தேர்தல் வழக்குகளின் விசாரணை! - உயர் நீதிமன்றம் அறிவிப்பு!

Published on 09/10/2020 | Edited on 10/10/2020

 

 Actors' union election cases to be heard in new session! -High Court Notice!

 

நடிகர் சங்கத் தேர்தல் தொடர்பான வழக்குகளின் விசாரணை, புதிய அமர்வில் நவம்பர் 3-ஆம் தேதி முதல் நடைபெறும் என, சென்னை உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது.

தென்னிந்திய நடிகர் சங்கத்தில் நடிகர் விஷால் தலைமையிலான அணியின் பதவிக்காலம், 2018-ஆம் ஆண்டு அக்டோபருடன் முடிவடைந்த நிலையில், செயற்குழு ஒப்புதலுடன் பதவிக்காலம் 6 மாதம் நீட்டிக்கப்பட்டது. அதன்பின்னர், 2019-ஆம் ஆண்டு ஜூன் 23-ஆம் தேதி தேர்தல் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. முறையான வாக்காளர் பட்டியலைத் தயாரித்து,  நியாயமாக தேர்தல் நடத்த குழுவை அமைக்கக் கோரி, நடிகர்கள் ஏழுமலை, பெஞ்சமின் ஆகியோர் வழக்கு தொடர்ந்தனர்.

வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்து 61 உறுப்பினர்கள் அளித்த புகாரின் அடிப்படையில், நடிகர் சங்கத் தேர்தலை நிறுத்தி வைக்க மாவட்ட சங்கங்களின் பதிவாளர் உத்தரவிட்டார். இந்த உத்தரவை எதிர்த்தும், தேர்தலை நடத்த பாதுகாப்புக் கோரியும், பொதுச் செயலாளர் என்ற முறையில் நடிகர் விஷால் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்குகளை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், தேர்தலை நடத்தலாம் என்றும், வாக்குகளை எண்ணக்கூடாது என்றும், இடைக்கால உத்தரவு பிறப்பித்தது. பின்னர், தனி அதிகாரி நியமனம் செல்லும் என்றும், தேர்தல் நடத்தப்பட்டது செல்லாது எனவும் தீர்ப்பளித்தது. மூன்று மாதத்தில் புதிதாக தேர்தலை நடத்த, சென்னை உயர் நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதிபதி கோகுல்தாஸை நியமித்தும், தனி நீதிபதி உத்தரவிட்டார்.

இந்தத் தீர்ப்புகளை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீடுகளை விசாரித்த இரு நீதிபதிகள் அமர்வு, தேர்தல் செல்லாது என அறிவித்து மூன்று மாதத்திற்குள் புதிதாக தேர்தல் நடத்த வேண்டும் என்ற தனி நீதிபதியின் உத்தரவுக்கு இடைக்காலத் தடைவிதித்தது.

பின்னர் இந்த வழக்குகளை, நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ் மற்றும் ஆர்.ஹேமலதா ஆகியோர் விசாரித்த நிலையில், தேர்தலை புதிதாக நடத்த வேண்டுமா, அல்லது ஏற்கனவே பதிவான வாக்குகளை எண்ண வேண்டுமா என, ஒருமித்த முடிவெடுக்க இருதரப்புக்கும் உத்தரவிட்டனர். ஆனால், இரு தரப்பும் தீர்வு காணாததால், வழக்கை மேற்கொண்டு விசாரிக்க விரும்பவில்லை எனக் கூறி விசாரணையில் இருந்து விலகினர். இதனையடுத்து, தலைமை நீதிபதி சாஹி உத்தரவின்படி, நடிகர் சங்கத் தேர்தல் தொடர்பான வழக்குகள், நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம் மற்றும் வி.பவானி சுப்பராயன் அமர்வில் விசாரணைக்கு பட்டியலிடப்பட்டன. 

 

Ad


அப்போது அனைத்துத் தரப்பிலும் வாதங்களுக்குத் தயாராக இருப்பதாகவும், வழக்கை காணொலி விசாரணைக்குப் பதிலாக நேரடி விசாரணை நடத்த வேண்டுமெனவும்  கோரிக்கை வைக்கப்பட்டது. இதையடுத்து, நவம்பர் 3-ஆம் தேதி முதல், வழக்கின் விசாரணையைத் தொடங்குவதாக நீதிபதிகள் அறிவித்துள்ளனர். அதுவரை, மூன்று மாதங்களில் நடிகர் சங்கத்துக்கு தேர்தல் நடத்த பிறப்பித்த உத்தரவுக்கு விதிக்கப்பட்ட தடையை நீட்டித்தும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

 

 

 

சார்ந்த செய்திகள்