தமிழகத்தில் உரிமமின்றி இயங்கும், வணிக நோக்கிலான கேன் குடிநீர் ஆலைகளை மூடுமாறு சென்னை உயர்நீதிமன்றம் அண்மையில் ஒரு பொதுநல வழக்கில் தீர்ப்பு அளித்தது. விதிகளை மீறி, மிகுந்த ஆழம் வரை சென்று குடிநீரை உறிஞ்சுவதால் நிலத்தடி நீர்மட்டம் பாதிக்கப்படுவதாக தொடரப்பட்ட வழக்கில் இவ்வாறு உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதையடுத்து, தமிழ்நாடு முழுவதும் விதிகளை மீறி செயல்பட்டு வரும் குடிநீர் ஆலைகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
சேலம் மாவட்டத்தைப் பொருத்தவரையில் சேலம் வருவாய்க் கோட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில், கோட்டாட்சியர் மாறன் தலைமையில் கடந்த இரண்டு நாள்களாக அம்மாபேட்டை, எருமாபாளையம், நிலவாரப்பட்டி, வலசையூர், பெரிய புதூர், குரங்குசாவடி, சோளம்பள்ளம், மாமாங்கம் ஆகிய பகுதிகளில் அதிகாரிகள் சோதனை நடத்தினர். இப்பகுதிகளில் 12 குடிநீர் ஆலைகள் அனுமதியின்றி இயங்கி வருவது கண்டறியப்பட்டது. இதையடுத்து அந்த ஆலைகளை உடனடியாக மூடி சீல் வைக்கப்பட்டது. போர்வேல் சுத்திகரிப்பு இயந்திரங்களுக்கான இணைப்பும் துண்டிக்கப்பட்டன.
இதேபோல், மேட்டூர், ஆத்தூர், சங்ககிரி ஆகிய பகுதிகளிலும் அனுமதியின்றி இயங்கி வரும் குடிநீர் ஆலைகள் குறித்து அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.