Skip to main content

கணவரைக் கொன்று ஏரிக்கரையில் போட்டுவிட்டு வந்தோம்... காதலனுடன் மனைவி பரபரப்பு வாக்குமூலம்!

Published on 13/07/2020 | Edited on 13/07/2020

 

Erode

 

தன் காதலுக்குக் கணவர் தடையாக இருந்ததால் காதலனுடன் சேர்ந்து கணவனைக் கொன்று சாக்குமூட்டையில் கட்டி ஏரிக்கரையில் போட்டுவிட்டு வந்துவிட்டோம் என்று மனைவி பரபரப்பு வாக்குமூலம் கொடுத்துள்ளார். 

 

ஈரோடு மாவட்டம் நம்பியூர் தாலுகாவில் உள்ள கோட்டுபுள்ளாம்பாளையத்தைச் சேர்ந்தவர் குமார். 30 வயதான இவர் நம்பியூர் அருகே உள்ள குருமந்தூரில் வாடகைக்கு ஆட்டோ ஓட்டி வந்தார். இந்துமதி என்பவரைக் காதலித்துத் திருமணம் செய்து கொண்ட இந்தத் தம்பதிக்கு ஒரு மகன் உள்ளான். 

 

இந்தநிலையில் இந்துமதி, "கடந்த 9ஆம் தேதி தனது கணவர் குமார் வெளியே சென்றார். வீடு திரும்பவில்லை என அக்கம் பக்கத்திலும், மாமனார் வீட்டிற்கும் தகவல் சொல்லியுள்ளார்." இதையடுத்து அக்கம் பக்கத்தினர் உறவினர்கள் அனைவரும் குமாரை தேடி வந்தனர். குமார் காணவில்லை என்பதைப் பற்றி போலீசில் புகார் அளிக்கலாம் என உறவினர்கள், அக்கம் பக்கத்தினர் பேசிக்கொண்டிருந்த நேரத்தல், ஏரிக்கரையில் ஒரு சாக்குமூட்டையில் குமார் சடலமாகக் கிடந்தார் எனத் தகவல் பரவியது. 

 

இதையடுத்து அங்கு குமாரின் உறவினர்கள், அக்கம் பக்கத்தினர் அங்கு விரைந்தனர். இதே போல் தகவல் அறிந்த நம்பியூர் போலீசார் அங்கு வந்தனர். குமாரின் உடலைப் பார்த்து உறவினர்கள் அதிர்ச்சியடைந்து கதறினர். அவரது மனைவி இந்துமதியும் கதறி அழுதார். 

 

போலீசார் குமாரின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக கோபி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்கள். இந்தக் கொலை வழக்கில் குற்றவாளிகளைப் பிடிக்க இன்ஸ்பெக்டர் மகாலிங்கம், சப்-இன்ஸ்பெக்டர் ராஜமாணிக்கம் ஆகியோர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது.

 

தனிப்படை போலீசார் குமாரின் மனைவி இந்துமதியை விசாரித்துள்ளனர். இந்த விசாரணையில் கோபி வடுகபாளையத்தைச் சேர்ந்த ஸ்ரீதர் (28) என்பவருக்கும் இந்துமதி என்பவருக்கும் கள்ளத்தொடர்பு இருப்பது தெரியவந்தது. அவர்கள் இருவரும் குமாரை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார்கள்.

 

போலீசில் இந்துமதி, “கோபியில் உள்ள அட்டை கம்பெனியில் வேலை பார்த்தபோது தானும், குமாரும் காதலித்தோம். பின்னர் திருமணம் செய்துகொண்டோம். பச்சைமலையில் ஒரு வீடு எடுத்து வசித்து வந்தோம். வீடு அருகில் ஒரு லேத் பட்டறை உள்ளது. அங்கு ஸ்ரீதர் அடிக்கடி வந்து சென்றார். அப்போது எனக்கும், ஸ்ரீதருக்கும் பழக்கம் ஏற்பட்டுத் தகாத உறவாக மாறியது. இது குமாருக்குத் தெரிந்ததால் என்னைக் கண்டித்தார். பின்னர் நாங்கள் கோட்டுப்புள்ளாம்பாளையத்துக்கு குடி வந்தோம். ஸ்ரீதரும் காதல் திருமணம் செய்துகொண்டவர். அவருக்கு மனைவியும், இரண்டு குழந்தைகளும் உள்ளனர்.

 

http://onelink.to/nknapp

 

ஆனாலும் எனக்கும், ஸ்ரீதருக்கும் பழக்கம் தொடர்ந்தது. அதனால் நானும், ஸ்ரீதரும் சேர்ந்து குமாரை கொல்ல முடிவு செய்தோம். கடந்த 9-ஆம் தேதி உடல்நிலை சரியில்லாமல் வீட்டில் குமார் படுத்திருந்தார். அதற்கு முன்னதாகவே ஸ்ரீதர் வீட்டில் வந்து ஒளிந்திருந்தார். படுத்திருந்த குமாரின் முகத்தில் தலையணையால் நான் அமுத்தினேன், ஸ்ரீதர் ஓடிவந்து மரக்கட்டையால் என்கணவரை தாக்கினார். இதில் அவர் இறந்துவிட்டார்.

 

பின்னர் உடலை ஒரு சாக்குமூட்டையில் கட்டி வீட்டில் வைத்துவிட்டோம். அன்று நள்ளிரவு ஸ்கூட்டியில் பிணம் இருந்த சாக்குமூட்டையை வைத்து கொண்டுசென்று ஏரிக்கரையில் போட்டுவிட்டு வந்துவிட்டோம்” என வாக்குமூலத்தில் கூறி உள்ளார். 

 

ஸ்ரீதரையும், இந்துமதியையும் கைது செய்த போலீசார் கோபி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

 

 

சார்ந்த செய்திகள்