ஈரோட்டில் தமிழக மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி இன்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது, ’’தமிழகத்தைப் பொறுத்தவரை தொழிற்சாலைகளுக்கு தேவையான மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது. தமிழகம் மின் மிகை மாநிலமாக திகழ்ந்து வருகிறது. ஒரு சிலர் தவறான செய்தியை பரப்பி இந்த அரசுக்கு கெட்ட பெயர் ஏற்படுத்த வேண்டும் என்று முயற்சி செய்து வருகின்றனர்.

கடந்த 27ஆம் தேதி அன்று திடீரென காற்றாலை மின்சாரம் 3,000 மெகாவாட்டில் இருந்து 100 மெகாவாட் ஆக குறைந்து விட்டது. நின்ற அனல் மின் நிலையத்தை நாம் உற்பத்தி செய்ய 8 மணி நேரமாவது ஆகும். அன்று மாலை 4 மணி நேரம் மற்றும் தொழிற்சாலைகளுக்கு ஜெனரேட்டரை போடச் சொல்லி இருந்தோம்.
பின்னர் மீண்டும் உற்பத்தி செய்யப்பட்டு தடையில்லா மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது. ஒரு சில இடங்களில் ஏற்படும் மின் தடைகளை மின்சார ஊழியர்கள் சரி செய்து வருகின்றனர். அதற்கு 30 நிமிடமாவது தேவைப்படும் அதனை மின்தடை என்று சொல்கிறார்கள். தமிழகத்துக்கு தேவையான மின்சாரம் உள்ளது. தற்போது 16 ஆயிரத்து 500 மெகாவாட் மின்சாரம் கையிருப்பு உள்ளது இதனால் தமிழ்நாட்டில் மின் தடை என்பதே இல்லை மேலும் கூடன்குளம் அணுமின் நிலையத்தில் கடந்த 10 நாட்களாக 800 மெகாவாட் மின் உற்பத்தி நமக்கு கிடைக்கிறது. திருவள்ளூர் பகுதிகளில் மரங்கள் அடிக்கடி உழுவதால் மின்தடை ஏற்படுகிறது அதனை ஊழியர்கள் சரி செய்து வருகின்றனர் .
முதலமைச்சர் தலைமையில் கூட்டம் நடந்தது. இதில் எங்கு எங்கு தண்ணீர் பற்றாக்குறை உள்ளதோ அங்கு போர்க்கால அடிப்படையில் தண்ணீர் வழங்க உத்தரவிட்டுள்ளார். மேலும் லாரிகள் மூலம் தண்ணீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பாராளுமன்றத் தேர்தலை பொறுத்தவரை எதிர்க்கட்சிகளின் பொய் பிரச்சாரத்தால் தோல்வி ஏற்பட்டு உள்ளது. இருந்தாலும் இடைத்தேர்தலில் மக்கள் எங்கள் அரசுக்குத்தான் வாக்களித்துள்ளனர். இதன் மூலம் தமிழகத்தில் எங்கள் அரசு தொடர மக்கள் விரும்புகிறார்கள். உள்ளாட்சித் தேர்தலில் நிச்சயமாக 100 சதவீதம் வெற்றி பெறுவோம்.இவ்வாறு அவர் கூறினார்..