ஒவ்வொரு வருடங்களும் 'தீபாவளி', 'தைப்பொங்கல்', 'ஆடி-18' என மேலும் சில பண்டிகைகள் வரத்தான் செய்கிறது. ஆனால், உழைக்கும் மக்களுக்குத் தீபாவளி தான் முக்கியப் பண்டிகை. அதற்குக் காரணம், வருடம் முழுக்க உழைக்கும் அவர்களுக்கு நிறுவனங்கள் வழங்கும் 'போனஸ்'தான். இந்த போனஸ் தொகையை வைத்து குடும்பத்தில் உள்ளவர்களில் முதலில் குழந்தைகளுக்கும், முடிந்தால் பெரியவர்களுக்கும் புத்தாடைகள் எடுப்பது வழக்கம்.
அரசுத் துறையில் பணிபுரியும் மாதச் சம்பளம் வாங்குவோர், வசதி படைத்தவர்கள், தொழிலதிபர்கள் மற்றும் பணக்காரர்கள் இதுபோன்ற பண்டிகைக் காலம் தொடங்குவதற்குப் பல நாட்களுக்கு முன்பே பெரிய பெரிய துணிக்கடைக்குச் சென்று அவர்களுக்குத் தேவையான துணிகளை வாங்கிச் செல்வார்கள். ஆனால், உழைக்கும் தொழிலாளர்கள் அவர்களுக்குத் தீபாவளியன்று அல்லது அதற்கு முந்தைய நாள் வழங்கும் போனசை வைத்துத்தான் துணிகள் வாங்குகிறார்கள்.
அதிலும் குறிப்பாக தெருவோரக் கடைகளில் தான், இம்மக்கள் துணிகளை வாங்குவார்கள். அப்படித்தான் இன்றைய இந்தக் காட்சியைப் பார்க்க முடிந்தது. ஈரோட்டில் ஜவுளி மற்றும் விவசாயம் சார்ந்த தொழிலாளர்கள், பல ஆயிரக்கணக்கானோர் வசிக்கிறார்கள். அதுபோலவே மாவட்டம் முழுக்க லட்சக்கணக்கான மக்கள் இந்தத் தொழிலை நம்பியே வாழ்கிறார்கள். அவர்களுக்குக் கூலி மற்றும் போனஸ் என்பது இறுதி நாட்களில் தான் கிடைக்கிறது. ஆகவேதான், தீபாவளிக்கு தங்கள் குழந்தைகளுக்குத் துணி எடுப்பதற்காக, ஈரோடு கடைவீதியில் பல ஆயிரக்கணக்கான மக்கள் குவிந்ததைக் காண முடிந்தது.
ஒவ்வொரு வருடமும் இது போன்ற கூட்டம், தீபாவளிக்கு முந்தைய நாள் இருக்கும் என்றாலும், இந்த வருடமும் பெரும்பாலும் அதுபோலவே காணப்பட்டது. இருப்பினும் மக்களின் முகங்களில் மலர்ச்சி இல்லாமல் இருப்பதையும் காண முடிந்தது. அதற்குக் காரணம் இந்த கொடிய கரோனா வைரஸ் பரவல். அதன் தொடர்ச்சியாக மத்திய, மாநில அரசுகள் போட்ட ஊரடங்கு, தொழில் முடக்கம், அதனால் ஏற்பட்ட வேலை இழப்பு, வருமானம் இல்லாமல் போனது இப்படி ஒட்டுமொத்தமாக இந்தத் தீபாவளி தொழிலாளர் மக்களுக்கு வேதனையைத் தான் கொடுத்திருப்பதாக அந்த மக்களின் முகங்களில் தெரிந்தது.