தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை பரவலாகப் பெய்து வருகிறது. இதன் தொடர்ச்சியாக ஈரோடு மாவட்டத்திலும் தொடர்ந்து மழைப் பொழிவு உள்ளது. இதில், 27ஆம் தேதி இரவு, மாவட்டத்தில் ஒரு சில பகுதிகளில் கனமழையும், பெரும்பாலான பகுதகிளில் லேசான மழையும் பெய்தது.
கொடுமுடிப் பகுதியில் மட்டும், இரவு 7 மணி முதல், விடிய விடிய இடியுடன் கூடிய கனமழை பெய்தது. கொடுமுடியில் இதுவரை இல்லாத அளவுக்கு, நேற்று இரவு முதல் அதிகாலை வரை அதிகபட்சமாக 334.4 மில்லி மீட்டர் (34 சென்டிமீட்டர்) மழை பொழிந்துள்ளது. இந்த மழையின் காரணமாக, கொடுமுடி வடக்குத் தெரு, நுழைவுப் பாலம் போன்ற பல வீடுகளில் மழை வெள்ளம் சூழ்ந்தது.
மக்களை அதிகாரிகள் உடனடியாக மீட்டு பாதுகாப்பான இடங்களில் தங்கவைத்தனர். மாவட்ட வருவாய் அலுவலர் கவிதா நேற்று நள்ளிரவு கொடுமுடிக்குச் சென்று பாதுகாப்பு ஏற்பாடுகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும், தாழ்வான பகுதிகளில் மழை நீர் பெருக்கெடுத்து சாலைகளில் ஓடியது. இதனால், அப்பகுதி வெள்ளக்காடாகக் காட்சியளித்தது. இதில், ஈரோடு மாவட்டத்தில் இன்று காலை வரை பெய்த மழை அளவு விவரம் மில்லி மீட்டரில் வருமாறு: ஈரோடு -5, கோபி -1, கொடுமுடி -334.4, மொடக்குறிச்சி -60, சென்னிமலை -11, எலந்தகுட்டை மேடு -1 ஆகிய அளவுகளில் மழை பொழிந்துள்ளது.